

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ம் தேதி மாலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர் 17-ஆம் தேதி தீவிரப் புயலாகவும், நவம்பர் 18-ம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் வட தமிழகக் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அப்போது, ஏற்கெனவே வானிலை மாதிரிகள் கணித்த பாதையில் நகராமல், வடக்கு நோக்கிச் செல்லாமல் ஒரே பகுதியில் மையம் கொண்டு நிலைத்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நவம்பர் 18-ஆம் தேதி மேற்கு நோக்கித் திரும்பி நகரத் தொடங்கும் புயல், நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகலில் வட தமிழகக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகம் வரை வலுப்பெறக்கூடும் என்பதால், வட தமிழகக் கடற்கரையை நெருங்கும்போதும், கரையைக் கடக்கும்போதும் பலத்த சூறைக்காற்றுடன் அதீத கனமழையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கரையைக் கடக்கும் நேரத்தில் புயலின் வலிமை சற்றுக் குறைந்தாலும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். அதேவேளையில், மிகக் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நேரடியாக நகர்ந்து கரையைக் கடக்கக்கூடும் என்பதால், புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி, அவற்றைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 22 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
இந்தப் புயலின் தாக்கத்தால் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குப் போதிய மழை கிடைக்காமல் போகலாம். இருப்பினும், நவம்பர் 22-ஆம் தேதி முதல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக மீண்டும் மழைப்பொழிவு கிடைக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.