

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிங் பரைக், தனது ராஜினாமா கடிதத்தை, மாநிலங் களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நேற்று வழங்கினார்.
புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. இதையடுத்து அக்கட்சியின் 80 எம்எல்ஏ.க்களில் 58 பேர் பிரிந்து தனி அணியாக உருவாகி, ரிதப்ரதா பானர்ஜி என்பவர் எதிர்க்கட்சி தலைவரானார்.
அதன் பின் திரிணமூல் மக்களவை எம்.பி.க்கள் 20-க்கும் மேற்பட்டோர் ககோலி கோஷ் தாஸ்திதார் தலைமையில் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி சுகேந்து சேகர் ராய் கடந்த திங்கள் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது 3-வது மாநிலங்களவை உறுப்பினராக பிரகாஷ் சிக் பரைக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது. இது மம்தாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.