சமாஜ்வாதி கட்சி உடையப் போகிறதா? - உ.பி. அமைச்சரின் பதிவும் எதிர்வினையும்

சமாஜ்வாதி கட்சி உடையப் போகிறதா? - உ.பி. அமைச்சரின் பதிவும் எதிர்வினையும்
Updated on
2 min read

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ள நிலையில், அதனை வதந்தி என ராம் கோபால் யாதவ் மறுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் எம்பிக்களும், தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த எம்பி மற்றும் எம்எல்ஏக்களில் பலர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் இன்று (ஜூன் 17) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு பெரிய பிளவு ஏற்படப் போகிறது. ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தை அளித்துள்ளார்.

சுரங்க ஊழல் மற்றும் கோமதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்ட ஊழல் ஆகிவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சட்ட நடவடிக்கைகள் இறுக்கமடைந்து வருவதால், சமாஜ்வாதி கட்சி பதற்றமடைந்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை மறந்துவிடுங்கள். ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சியுமே பாஜகவில் இணையத் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான ராஜ்பரின் இந்தப் பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஜ்பர், “நான் சொன்னது 100% உண்மை. நான் எதைச் சொன்னாலும் அதை துணிச்சலுடன் சொல்வேன்; உண்மையை மட்டுமே சொல்வேன். ராம் கோபால் யாதவ் ஒரு பட்டியலைத் தயாரித்து அதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட புன்னகையை நான் பார்த்தேன். இரு இதயங்கள் இணையும்போது வார்த்தைகள் மவுனமாகலாம். ஆனாலும், உரையாடல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நெருக்கடியில் இருக்கும் தலைவர்கள், தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதையும், தாங்கள் பாஜகவில் இணையத் தயாராக இருப்பதையுமே அந்தக் கடிதம் உணர்த்துகிறது. அந்தக் கடிதத்தில் உள்ள பெயர்கள் குறித்து நான் இப்போதே வெளிப்படுத்தினால் அந்த முயற்சி முழுமையாக வீணாகிவிடும். தயவு செய்து சில நாட்கள் காத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பரின் இந்த விளக்கத்தை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கோபால் யாதவ், “நான் கடிதம் சமர்ப்பித்தேனா என்பதை அமித் ஷாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுவதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார். என்ன பேசுகிறோம் என்பது அவருக்கே தெரியாது. சமாஜ்வாதி கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இனிமேலும் வராது. அவர்கள் வதந்திகளை மட்டுமே பரப்புகிறார்கள். மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த நாடகம் எவ்வளவு காலத்துக்கு தொடரும்? உங்களுக்கு உணவளிப்பவர்களின் மொழியைத்தான் நீங்கள் பேசுவீர்கள்” என விமர்சித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி உடையப் போகிறதா? - உ.பி. அமைச்சரின் பதிவும் எதிர்வினையும்
முஸ்லிம் இட ஒதுக்கீடு: முதல்வர் விஜய் தெளிவுபடுத்த இந்து முன்னணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in