

சென்னை: மத ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ள இந்து முன்னணி, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அமைச்சர் ஷாஜகானின் கருத்து குறித்து முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிறுபான்மை அரசாக இயங்குவதால், அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் விருப்பம் போல் செயல்பட்டு முதல்வர் ஜோசப் விஜய்யை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ள முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏவும் தமிழக அமைச்சருமான ஷாஜகான், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவது குறித்து அமைச்சரவை பரிசீலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மதிப்புக்குரிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் செயலாகும்.
இட ஒதுக்கீடு சமூக நீதிக்கானது என்று இந்திய திருநாட்டின் அரசியல் சாசனம் தெளிவாகக் கூறியுள்ளது. இதனை மதத்தின் அடிப்படையில் செய்யக்கூடாது. இட ஒதுக்கீடு என்பதை அரசியலாக்கக் கூடாது என்று தெளிவாக தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்த மாநில அரசுகளின் மசோதாவை பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களும் தடை செய்துள்ளன. உச்ச நீதிமன்றமும் இது போன்ற மதரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து வாழ முடியாது என்று காரணம் காட்டி இந்தியாவை துண்டாக்கி பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற முஸ்லிம் நாடுகள் உருவாக காரணமே இந்த முஸ்லிம் லீக் தான்.
அதன் மிச்சம் தான் நமது நாட்டில் மீண்டும் மத ரீதியான பிரிவினையை உருவாக்கிட முயற்சிக்கும் இந்திய முஸ்லிம் லீக் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஷாஜகான் கூறுவது முதல்வர் ஜோசப் விஜய்யை மதவாத பொறியில் சிக்க வைக்கத் தான். இதன் மூலம் ஏழை எளிய இந்துக்களை மதம் மாற்ற சதி செய்கிறது முஸ்லிம் லீக்.
இட ஒதுக்கீடு செய்வதானால் அது இந்துக்களின் சலுகைகளில் கை வைப்பதாக அமையும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஏராளமான அரசு உதவிகளை பெறும் கிறிஸ்தவ, முஸ்லிம்கள், மேலும் மேலும் இந்துக்களுக்கு துரோகம் செய்யத் துணிவதை இந்துக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகங்கள் இவர்களை எதிர்த்து போராடும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். இந்துக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.
அமைச்சர் ஷாஜகான் கூறியது உண்மையானல், இந்துக்களுக்காக இந்துக்களை ஒருங்கிணைத்து இந்து முன்னணி போராடி இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க முன் வரும். நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நீதியை பெற்றுத் தரவும் முன்வரும்.
எனவே தமிழக முதல்வர், அமைச்சர் ஷாஜகான் கூறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை குறித்த தனது அரசின் நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.