கொல்கத்தா: யோகாவை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கடைப்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் இதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளின் கீழ், ‘சர்வதேச யோகா தினம்’ இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்புச் சாலையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து பிரதமர் உள்ளிட்டோரும் யோகாசன பயிற்சிகளை செய்தனர்.
கொல்கத்தாவில் பிரதமர் பங்கேற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகள். ஜூன் 21, உலகின் மிகப்பெரிய கூட்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மக்களவையும் சமூகங்களையும் நாடுகளையும் இணைக்கும் தனித்துவமான சக்தி யோகாவுக்கு உண்டு. யோகாவில் பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்தியாவில் இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலம், வங்கம் முதல் குஜராத் வரையிலும் முழு நாடும், யோகாவின் ஆன்மாவில் மூழ்கியுள்ளது. இது ஒரு வாழ்க்கை முறையாக மாறி வருகிறது. அனைவரும் யோகாவை ஏற்கின்றனர் என்பதை இது நிரூபிக்கிறது. யோகா என்பது வெறும் ஓர் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உயிர்சக்தி, நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
யோகாசன பயிற்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
நமக்கு வயதாகும்போது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இருக்க யோகா உதவுகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை, மனதின் சமநிலை, உணர்ச்சியின் வலிமை ஆகியவற்றை யோகா ஆதரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. வாழ்க்கை முறை சமநிலையின்மையால் உடல்நல சவால்கள் எழுகின்றன. நல்லிணக்கம், ஒழுக்கம், உள் அமைதிக்கான ஒரு நடைமுறைப் பாதையை யோகா வழங்குகிறது. யோகா தனிப்பட்ட நல்வாழ்க்கு மட்டுமல்ல; அது உலக அமைதிக்கான ஒரு பாதையும்கூட. இந்த பயிற்சி சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மக்களிடையே புரிதலையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது. யோகாவை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கடைப்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம். யேகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம்” என கேட்டுக்கொண்டார்.