

புதிய நாடாளுமன்றம்
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி), சிவசேனா(யுபிடி) போன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜினாமா அல்லது கட்சி தாவலால் நாடாளுமன்றத்தின் சமன் மாறி வருகிறது. இதன் பலனால் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தயாராகி வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தின் தாக்கம் நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் எண்ணிக்கையின் சமனை மாற்றி அமைத்துள்ளது. இது, அடுத்து வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு நிலவியது. இதன் காரணமாக, முக்கியமான மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இப்போது எதிர்கட்சிகளில் அதன் எம்பிக்களின் செயல்பாடுகளால், சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது.
இம்மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அரசு மீண்டும் தயாராகி வருகிறது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம், மம்தா பானர்ஜியின் டிஎம்சியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் டிஎம்சியின் தோல்வியால் அக்கட்சி அனைத்து மட்டங்களிலும் சிதைந்து வருகிறது. கட்சியின் 28 மக்களவை எம்பிக்களில் 20 பேர் கிளர்ச்சி செய்து 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (என்சிபிஐ) என்ற புதிய கட்சியில் இணைந்துள்ளனர். என்சிபிஐ இப்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் நேரடியாக இணையவுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா(யுபிடி) கட்சியிலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தச் சிதைவும் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மக்களவையின் 9 எம்.பி.க்களில் 6 பேர் அணி மாறி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்துள்ளனர். ஏக்நாத்தின் சிவசேனா ஏற்கெனவே என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதுவும், பாஜகவின் நாடாளுமன்றத்தில் என்டிஏவின் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும்.
இந்த இரு கட்சிகளின் கிளர்ச்சியால் என்டிஏவில் 26 எம்பிக்கள் எண்ணிக்கை கூடிவிடும். இந்த கிளர்ச்சியின் பின்னணியில் பாஜக இருப்பதாகப் புகார்கள் உள்ளன. இச்சூழலில் அரசியலமைப்பு மசோதா நிறைவேற்ற 28 எம்பிக்கள் குறைகிறது. இதையும் சமன் செய்ய சமாஜ்வாதியிலும் கிளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் சில சிறிய கட்சிகளின் எம்பிக்களும் என்டிஏ ஆதரவு நிலை எடுக்க ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதன்பலனாக, அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மத்திய அரசு மிக அருகில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்ற குறைந்தது ஆறு மாதங்கள் இடைவெளி தேவை. இதனால், அந்த மசோதாக்களில் சிறிய மாற்றங்கள் செய்து புதிதாக அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மாற்றத்திற்காக திமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக திட்டமிடுகிறது.
மக்களவையில் திமுகவிடம் 22 எம்பிக்கள் உள்ளனர். மற்றொரு முக்கிய அரசியல் நிகழ்வாக, தமிழ்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான திமுக, காங்கிரஸுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலிருந்தும் திமுக விலகுகிறது.
மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சில கட்சிகள் வெளியேறும் சூழலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் என்டிஏவிற்கு சாதகமாகவே அமையும். மக்களவையை போல், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 164 வாக்குகள் தேவைப்படுகின்றன.
என்டிஏவிடம் தற்போது 150 எம்பிக்கள் உள்ளனர். இங்கு திமுகவின் ஆதரவு கிடைத்தால், எண்ணிக்கை 158 என உயரும். அப்போதும் பெரும்பான்மைக்கு 6 வாக்குகள் தேவைப்படும். திரிணாமுல் எம்பிக்களின் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு நடைபெறும் இடைத்தேர்தல்கள் மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவு மூலம் இந்த 6 வாக்குகளையும் எளிதாகப் பெற முடியும்.
இதனிடையே, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின்10 எம்பிக்களிலும் பிளவு ஏற்பட்டது. இதன் மாநிலங்களவை 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர். இவர்களின் பதவி பறிப்பு இன்னும் முடிவாகவில்லை.