

பிரதமர் மோடி
புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் சுல்தான் மற்றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது கவலையைத் தெரிவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, திங்கள்கிழமை அன்று சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், நேற்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா ஆகியோருடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் வான் வழிப் போக்குவரத்து முடக்கம், கச்சா எண்ணெய் விநியோகத் தடை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் நடைபெற்ற ஆலோசனையின் போது, வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். மேலும், அங்கு வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார்.
முன்னதாக, ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மிக மோசமான சூழல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு தான் தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா ஆகியோருடன் பிரதமர் மோடி பேசுகையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதே இப்போதைய மிக முக்கியமான தேவை என்பதை வலியுறுத்தினார்.
மேலும், இந்த இக்கட்டான காலக் கட்டத்தில் அங்குள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக சவுதி இளவரசருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.