

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான பல அவசரகால நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது, எல்பிஜி சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் தளத்தில், ”நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து அவசியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால் உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது” என பதிவிட்டுள்ளார்.