

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பான் மசாலா விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்களும் இணைந்து நடித்த விளம்பரம் வெளியானது.
அவர்கள் 3 பேருக்கும் மகாராஷ்டிர உணவு பாதுகாப்பு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: விமல் எலச்சி என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த விளம்பரம், மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பிராண்டுடன் நேரடியாகத் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இந்த விளம்பரப் பிரச்சாரத்தில் பங்கேற்பதை நடிகர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும், இது தொடர்பான அனைத்து பதிவுகளையும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், அவர்கள் விளம்பரங்களில் நடிக்க 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. முன்னதாக 2022-ம் ஆண்டு, இதே நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் அக் ஷய் குமார் பகிரங்க மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.