

புதுடெல்லி: கடந்த 1960-களில் டெல்லி கடமைப் பாதையில் இண்டியா கேட் அருகே உள்ள போட் கிளப் புல்வெளி தளம் போராட்ட களமாக இருந்தது. கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த போராட்டத்தின்போது சுமார் 5 லட்சம் விவசாயிகள் போட் கிளப் புல்வெளியில் குவிந்தனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடத்த கடந்த 1993-ல் தடை விதிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த டெல்லி போலீஸார் அனுமதி வழங்கினர். கடந்த ஜூன், ஜூலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஜந்தர் மந்தரில் நடத்திய தொடர் போராட்டத்தால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் போராட்டம் நடத்த சிஜேபி அனுமதி கோரியது. ஆனால் டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அண்மையில் விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறும்போது, “ஜந்தர் மந்தரில் போதிய கழிப்பறை வசதி இல்லை. அங்கு எம்பிக்கள் குடியிருப்பு, அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. அவசர காலத்தில் ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியவில்லை. எனவே மாற்று இடத்தை பரிசீலிக்கலாம்” என்று தெரிவித்தார்.
தலைமை நீதிபதியின் அறிவுரைப் படி மாற்று போராட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில நாட்களுக்கு முன்பு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஜந்தர் மந்தருக்கு பதிலாக 3 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் அனுராக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இனிமேல் அனுமதி அளிக்கப்படாது.
போராட்ட களம் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.