

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்களை மாநில அளவில் தணிக்கை செய்ய அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்கள் நிலங்களை ஆய்வு செய்வது மகாராஷ்டிரா மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
நிலம் தணிக்கை செய்ய என்ன காரணம்?
நாசிக் நகரில் சமீபத்தில் 6 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததில் ரூ.300 கோடி அளவுக்கு நில மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து போலீஸார் புலன் விசாரணை நடத்தியதில் கிறிஸ்தவ தேவாலயங்களின் நிலங்கள் சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்பட்டதும், விற்பனை செய்யப்பட்டதும், போலியான ஆவணங்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக 22 கட்டுமானதாரர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள், அறங்காவலர்கள் என 37 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இப்போது வரை பரிமாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் குறித்து மாநிலம் முழுவதும் தணிக்கை செய்ய மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா கிறிஸ்தவ திருச்சபைகளிடம் எவ்வளவு நிலம் கைவசம் உள்ளன?
மகாராஷ்டிராவில் உள்ள கிறிஸ்தவ மத அமைப்புகள் ஒரே தேவாலய அமைப்பின் கீழ் இயங்கவில்லை. இவர்கள் பல்வேறு குழுக்களாக சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுத் தனித்தனியாக இயங்குகின்றன. நூற்றுக்கணக்கில் இருக்கும் இந்த அமைப்புகளுக்கு ஏராளமான நிலம் சொந்தமாக உள்ளன.
கத்தோலிக்க திருச்சபையை உள்டக்கி, புராட்டஸ்டென்ட் டயோசிஸ் (மறைமாவட்டம்), தனிப்பட்ட டயோசிஸ், பங்குதலங்களாக, கல்வி அறக்கட்டளைகளாக, மருத்துவமனைகளாக, தொண்டு நிறுவனங்களாக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும், தனித்தனியாக தங்களின் பெயரில் நிலத்தை சொந்தமாக வைத்துள்ளன.
ஏராளமான நிலங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. தனிநபர்களிடம் இருந்து பெற்ற நன்கொடைகள், கொங்கன் கடற்கரைப் பகுதியில் போர்ச்சுகீசியர்கள் ஆட்சியின் போது கிடைத்த நிலங்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் போது கிடைத்த நிலங்கள் உள்ளன. இது தவிர பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள் மற்றும் சமூக நல நிறுவனங்கள் உருவாக்க அடுத்தடுத்து நிலங்களும் வாங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்திலோ அல்லது நாட்டிலே கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சொந்தமாக இருக்கும், அவர்கள் வசம் உள்ள மொத்த நிலம் குறித்த அதிகாரப்பூர்வ அரசுத் தரவுத்தளமோ அல்லது சரிபார்க்கப்பட்டு சட்டரீதியாக ஏற்கப்பட்ட மதிப்பீடுகளோ இல்லை.
2011-ம் ஆண்டு மகாராஷ்டிரா மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 10.80 லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.96% பேர் கிறிஸ்தவர்கள். மும்பை, தானே, பால்கர், ராய்காட், புனே, அகமதுநகர், கொங்கன் பகுதியில் சில இடங்களில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள் வசிக்கிறார்கள்.
எதற்காக நிலத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது?
நாசிக் நகரக் காவல் ஆணையரின் பழைய அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்ட நிலத்துக்கு , போலியான குத்தகை ஒப்பந்தங்களை உருவாக்கி காவல் துறையையே ஒரு குழு ஏமாற்றியது. அது மட்டுமல்லாமல் குத்தகைக்கு விட்டு அரசின் பல்வேறு துறைகளையும் ஏமாற்றி, போலியான ஆவணங்களை உருவாக்கி, விற்பனை செய்து ரூ.300 கோடி அளவு மோசடியும் நடந்ததுள்ளது.
போலீஸார் தகவலின்படி, 1990-ஆம் ஆண்டு முதல் போலீஸார் குத்தகைக்கு பயன்படுத்திய நிலம், 'நாசிக் டயோசிசன் கவுன்சில்' (NDC) என்ற அமைப்பால் விற்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நிலத்துக்கும் அந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் உரிமையாளர்களும் இல்லை. அந்த நிலம் உண்மையில் 'நாசிக் டயோசிசன் டிரஸ்ட் அசோசியேஷன்' (NDTA) நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலியான ஆவணங்களை உருவாக்கி, என்டிசி என்ற அமைப்பு நிலங்களை விற்பனை செய்தது.
இந்த விவகாரத்தை பாஜக எம்எல்ஏ தேவயாணி பராண்டே சட்டப்பேரவையில் சமீபத்தில் எழுப்பி, “மாநிலத்தில் இதுபோன்று எங்கெல்லாம் நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இவரின் கோரிக்கைக்கு பதில் அளித்த வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே பிறப்பித்த உத்தரவில் “ மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள், தேவாலய மிஷனரி அமைப்புகளுக்குசொந்தமாக இருக்கும் நிலங்கள்,வைத்திருக்கும் நிலங்களை தணிக்கை செய்ய வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலிருந்து வழங்கப்பட்டநிலம், சுதந்திரத்துக்குப்பின் வழங்கப்பட்ட நிலம், அதன்பின் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும். இந்த தணிக்கை நடவடிக்கையை அடுத்த 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மாநிலம் தழுவிய தணிக்கையில் எவை அடங்கும்?
வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே சட்டப்பேரவையில் கூறுகையில், “ மண்டல ஆணையர்கள் தலைமையில், மண்டல அளவில் தணிக்கை செய்ய கமிட்டிகள் உருவாக்கப்படும். இந்த கமிட்டி, தேவாலயங்களுக்குச் சொந்தமான நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும், சுதந்திரத்துக்கு முன், சுதந்திரத்துக்குப் பின் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலங்களையும் ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்கும்.
சட்டத்தை மீறி ஏதேனும் நில ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதா, பரிவர்த்தனைகள் குறித்தும் கமிட்டி ஆராயும். இக்குழுக்களில் நிலத் தீர்வைக் கண்காணிக்கும் ஆணையர் அலுவலக அதிகாரிகள், காவல் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுவர்” எனத் தெரிவித்தார்.
முறைகேடுகள் கண்டறியப்பட்டால் என்ன நடக்கும்?
மகாராஷ்டிரா அரசு தகவலின்படி, “ கிறிஸ்தவ அமைப்புகள் சட்டப்படி நிலங்களை வாங்கியிருந்தால், பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், ஆவணங்கள் இருந்தால் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஒரு வேளை விசாரணையில் சட்டவிரோதமாக நிலங்கள் பரிமாற்றம், போலியான ஆவணங்கள், இதர சட்டமீறல்கள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடங்கும்.
தனிப்பட்ட முறையில் மாற்றப்பட்ட நிலம் சந்தேகத்திற்குரியதாகவோ அல்லது விதிகளை மீறியிருப்பதாகவோ கண்டறியப்பட்டால், அரசு சட்ட நடவடிக்கையைத் தொடங்கி அத்தகைய நிலத்தை கையகப்படுத்தும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே மதப் பிரசாரம் செய்த கிறிஸ்தவ அமைப்புகளின் வசம் உள்ள நிலங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு மாற்றப்பட்ட சொத்துகளை ஆய்வு செய்து ஏதேனும் சட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என ஆய்வு செய்யப்படும்
ஒருவேளை சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வேறு ஏதேனும் கட்டங்கள் கட்டப்பட்டிருந்தாலோ, அல்லது பொதுக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருந்தாலோ, சட்டரீதியான ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கப்படும்” என்று அரசு தெரிவித்துள்ளது.