

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கணக்காளர் ஜிக்னேஷ் தலாவியா, பங்குச் சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்து குடும்பத்தினரிடமே கடத்தல் நாடகமாடியுள்ளார்.
கடந்த ஜூன் 12-ம் தேதி காணாமல் போன ஜிக்னேஷ், தான் கட்டி வைக்கப் பட்டிருப்பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாகவும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜிக்னேஷ் குடும்பத்தினர் இதுகுறித்து சூரத் போலீஸில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், போலீஸார் தரப்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். பின்னர் ஜூன் 15-ம் தேதி கோத்ராவில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஜிக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் தன்னைத் தானே கயிற்றால் கட்டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்பத்தினரை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இதுபோன்று செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜிக்னேஷ் மீது பொய் வழக்குப் பதிவு செய்தல், ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.