

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையை பாஜக நிறைவேற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பலமாக எதிரொலிக்க, அந்த மசோதா தோல்வியடைந்தது.
அடுத்ததாக மழைக்கால கூட்டத் தொடரை நாடாளுமன்றம் எதிர்நோக்கியிருக்கிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) மெஜாரிட்டியை பெறுவது என்பது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு வகையிலும் சகாயமளிக்கக் கூடியது. அதைப் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
இன்றைய அரசியல் நிலவரப்படி ஆம் ஆத்மி தொடங்கி திரிணமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் எம்.பி.க்கள் கொத்துக் கொத்தாக கட்சித் தாவுவது அல்லது கட்சித் தாவ ஆயத்தமாவது பாஜகவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சியிருக்கிறது.
அதனாலேயே, “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவது மழைக்கால கூட்டத் தொடருக்குள் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதைக் கொண்டு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - தொகுதி மறுவரையறை மசோத்தாக்களை நிறைவேற்றுவோம்” என்று மத்திய அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசன திருத்த மசோதா பாஜகவுக்கு அவசியமாகிறது. அதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி மிக மிக அவசியம்.
மக்களவையில் உள்ள 540 உறுப்பினர்களில் 360 என்ற சாதகமான வாக்குகள்தான் பாஜகவின் இலக்கு. இப்போதைக்கு அதன் பலம் 293 ஆக இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து 20 எம்.பி.க்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிருப்தி எம்.பி.க்கள் 9 பேரில் 6 பேர் பாஜகவுக்கு தாவக்கூடும். அப்படியென்றால் அவர்களின் பலம் 319 ஆகும். அப்போதும் கூட 360 என்ற எண்ணை எட்ட இன்னும் ஒரு காத தூரம் இருக்கும்.
ஆனால், பாஜகவின் சில முக்கியப் பிரமுகர்கள் சிலர், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 37 மக்களவை எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கிக் கொண்டு எங்கள் கட்சிக்கு தாவிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளுக்குள் பூகம்பங்கள் தொடரும் என்று அவர்கள் கோட் வேர்டுடன் இதைச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து பழனிசாமியை முதல்வராக்குவது என்ற ‘போஸ்ட் போல்’ அதிர்ச்சியில் திமுக சம்பந்தப்பட்டதாக வெளியான தகவலைப் போல், காங்கிரஸால் கழட்டி விடப்பட்ட திமுகவுடன் நெருங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் முன்னெடுப்புகளை பாஜக மேற்கொள்ளாமல் இல்லை என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.
245 என்ற உறுப்பினர்கள் பலம் கொண்ட மாநிலங்களவையில், என்டிஏ 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி என்பது 164 என்ற நிலையில், தற்போது என்டிஏ 152 என்ற அளவில் உள்ளது. ஏப்ரல் 24-ல் ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.பிக்கள் தாவியதால் அது கிடைத்தது. திரிணமூல் எம்.பி.க்கள் மூவர் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடத்தை எப்படியும் பாஜக தனது பலத்தால் நிரப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல என்று பழங்கள் அடுத்தடுத்து பாலில் நழுவி விழுவதைக் கண்டு உண்மையில் பாஜகவினரே ஆச்சர்யத்தில் இருக்கிறார்களாம். ஏப்ரலில் ஆம் ஆத்மி, மே மாதத்தில் திரிணமூல், ஜூன் மாதத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா என்று விக்கெட்டுகள் தங்களுக்கு சாதகமாக விழுவதில் மகிழ்ச்சியில் திளைக்கின்றனராம்.
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதும், ஒரே நாடு ஒரே தேர்தலை அமலாக்குவதிலும் பாஜக ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது என்று கேட்டால், “போஸ்ட் நரேந்திர மோடி பாஜக”-வை வலுவாகக் கட்டமைப்பதற்கான அடிப்படைத் தேவைகள் என்கிறார்கள் உள் விவகாரத்தை கசியவிட்டவர்கள்.
மோடிக்கு அடுத்த வாரிசை கட்சி சீக்கிரத்தில் முடிவு செய்யவேண்டும். அடுத்த மக்களவை தேர்தலில் மோடி 79 வயதை எட்டியிருப்பார். மோடிக்கு மாற்றாக வருபவர் அதே மக்கள் செல்வாக்கை, அபிமானத்தை பெற்றவராக இருக்க வேண்டும். அதற்கு தொகுதி மறுவரையறை உத்தரவாதம் தரும் என்று பாஜக நம்புகிறது.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இதே உத்தரவாதத்தை நினைத்துதான் அஞ்சுகின்றனர். தொகுதி மறுவரையறை பாஜகவுக்கு என்றென்றைக்குமான அமைப்பு ரீதியான பலத்தை உருவாகித் தந்துவிடும் என்கின்றனர். அதற்கு அசாம் மாடலை உதாரணமாகக் கூறுகின்றனர்.
அசாமில் 2023 தேர்தலுக்கு முன்னர் பாஜக தொகுதி மறுவரையறை செய்தது. அது மாநிலத்தின் கிழக்கு, மத்திய மாவட்டங்களில் முஸ்லிம் பெரும்பான்மை வாக்கு வங்கிகளை பதம் பார்த்தது. அதனால் தேசிய அளவில் தொகுதி மறுவரையறை என்பது அசாமில் நடந்ததை நாடு முழுவதும் சாத்தியப்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.
“அசாமில் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொகுதிகளை அரசு வேண்டுமென்றே அபகரித்து தொகுதி மறுவரையறை செய்தது. அதேதான் நாடு முழுவதும் நடக்கப் போகிறது” என்று பிரியங்கா காந்தி வாதிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
ஆனால், இதை மத்திய அரசு தரப்பு திட்டவட்டமாக மறுக்கிறது. 1971 சென்சஸ் அடிப்படையில் கடைசியாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இப்போது மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நாடாளுமன்ற, மக்களவை தொகுதி மறுவரையறை செய்வது அவசியமானது என்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தலைப் பொறுத்தவரை, தேசப் பாதுகாப்பு, தேசிய உணர்வு, தேசப் பெருமை, இறையான்மை என்ற தேசிய அளவிலான விவாகரங்களையே மாநில அளவிலும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது அதற்கு சாதகமாக அமையும் என்று பாஜக நம்புகிறது.
மேலும், “தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தன்னை இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் சாத்தியமே இல்லாதது எனக் கருதப்பட்ட மாற்றங்களை எல்லாம் செய்ய வேண்டும். அதன்மூலம் வரலாற்றில் தான் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டத்தட்ட இது தனது கடைசி பதவிக்காலமாக இருக்கக்கூடும் என்பதால் ஸ்வீப்பிங் சேஞ்சஸ் தான் அவரின் இலக்கு” என்று பாஜக மூத்த தலைவர் ஒருவரே கூறுகிறார்.
உத்தவ் தாக்கரேவின் சமீபத்திய கருத்து ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது. “கட்சியில் யாரேனும் ஒருவர் சிவசேனாவின் அடுத்த தலைவரானால் நான் மகிழ்ச்சியுடன் எனது பதவியை ராஜினாமா செய்வேன். இந்தக் கட்சியை நிச்சயமாக திருடர்களின் கைகளில் நழுவிச் செல்ல விடமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று ஆரம்பித்து பாஜக தேசிய அளவிலும், மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை நோக்கி நகர்கிறதா என்று அஞ்சவைக்கிறது என்ற அரசியல் நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.