

புதுடெல்லி: எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கோ நாட்டில் 2018 முதல் 2020 வரை எபோலா வைரஸ் அதிக அளவில் பரவி சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர்.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ‘பண்டிபுக்யோ’ என்னும் ஓர் அரிய வகை எபோலா வைரஸ், கடுமையான குருதிப்போக்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடியது என்பதால், தற்போது தீவிரமான நோயாக எபோலா கருதப்படுகிறது.
இந்நிலையில் எபோலா வைரஸ் மீண்டும் பரவி பலர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்குத் தேவையான மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா சிடிசி) வெளியிட்டுள்ள சமூக ஊடகச் செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியா அனுப்பியுள்ள எபோலா வைரஸுக்கான மருந்துகள், மருத்துவக் கருவிகள் உகாண்டாவிலுள்ள மருத்துவ மையத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கிருந்து ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்துக்கு இந்த மருந்துகள் விரைவில் வந்து சேரும்.
இங்கிருந்து பாதிக்கப்பட்டுள்ள டிஆர் காங்கோ பகுதிகளுக்கு அவை கொண்டு சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் உதவியுள்ள இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் ஆப்பிரிக்கா சிடிசி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.