புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 4-5 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் (GCC) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழு தலைவர்கள் இன்று கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பியூஷ் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை தயாராக உள்ளது. அது இன்னும் 4-5 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பூர்வமான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாத மத்தியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டறிக்கை வெளியான பிறகு, இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18% ஆக குறைப்பதற்கான அரசாணையை அமெரிக்க அரசு பிறப்பிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை கொள்முதல் செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
வெள்ளை மாளிகையில் செவ்வாய் கிழமை (பிப். 3) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட், ‘‘அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் சிறப்பான ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார். அதன்மூலம், இந்தியாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியுடன் அவர் நேடியாகப் பேசினார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை கொண்டிருக்கிறார்கள். அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடனான உறவை மிகவும் விரும்புகிறார், பிரதமர் மோடி மீதும் இந்தியா மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிடம் இருந்தும், வெனிசுலாவிடமிருந்தும்கூட எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நேரடி பலன்களைத் தரும். வெனிசுலாவின் வர்த்தகத்தையும், அதன் எண்ணெய் விற்பனையையும் அதிபர் ட்ரம்ப்பும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவும் நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
எரிசக்தி, போக்குவரத்து, விவசாயப் பொருட்கள் ஆகியவற்றை 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய மோடி உறுதி அளித்துள்ளார்.
இந்தியா மீதான அமெரிக்க வரி 18% ஆக இருக்கும். அதேநேரத்தில், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். எனவே இது ஒரு சிறந்த ஒப்பந்தம். அமெரிக்க தொழிலாளர்கள், வணிகங்கள், நுகர்வோர் அனைவருக்கும் இது ஒரு பெரிய வெற்றி’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.