

புது டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் சமர்ப்பித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்ட 10 பக்க நோட்டீஸை, மக்களவையில் இருந்து 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 63 எம்.பி.க்களும் என மொத்தம் 193 எம்.பி.க்கள் அளித்தனர்.
இதுபோன்ற ஒரு நோட்டீஸ் நாடாளுமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். கடந்த காலத்தில், எதிர்க்கட்சிகள் இரண்டு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்தன. ஆனால், அந்த முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாமல் போனது.
நாடாளுமன்றத்தில் தற்போது அளிக்கப்பட்டுள்ள 10 பக்க நோட்டீஸில், ஞானேஷ் குமார் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், பதவியில் பாரபட்சமான நடத்தை முதல் தேர்தல் மோசடி விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல் மற்றும் பெரும் வாக்குரிமை பறிப்பு வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஞானேஷ் குமார் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (SIR) ஆளும் பாஜகவுக்கு உதவியதாகவும் அந்த நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
1968-ஆம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், ஒரு தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அந்தத் தீர்மானம் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, எந்தவொரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட இயலாது.
அந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை அவைத் தலைவர் ஆகியோரால் கூட்டாக ஒரு குழு அமைக்கப்படும்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சிறப்புக் குழுகருதினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
விதிமுறைகளின்படி, மாநிலங்களவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் குறைந்தது 50 எம்.பி.க்களும், மக்களவையில் கொண்டுவரப்பட்டால் 100 எம்.பி.க்களும் அந்த நோட்டீஸில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நோட்டீஸில் மக்களவையில் 130 கையெழுத்துகளும், மாநிலங்களவையில் 63 கையெழுத்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.