

பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் மோதல்களுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், இரு மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை உணர்வை பலப்படுத்துவோம் என்று முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கர்நாடகாவின் ஹசன் நகரில் உள்ள ஹசனம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்த டி.கே. சிவகுமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரிப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு எவ்வித அனுமதியும் மத்திய அரசு தரக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் டி.கே. சிவகுமார், “தமிழக முதல்வர் விஜய்க்கு நாட்டின் சட்டங்கள் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
மேகேதாட்டு அணையைக் கட்ட யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் கர்நாடகாவுக்கு இல்லை. தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீரை தர வேணடும் என்ற நிபந்தனையுடன், கர்நாடகா தனக்கு சொந்தமான இடத்தில் அமை கட்டிக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும். இது ஒரு சமநிலைப்படுத்தும் அணை. இதற்காக, சுமார் 5,400 ஏக்கர் வன நிலங்களைக் கண்டறிந்துள்ளோம். அவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்தவுடன் நாங்கள் எங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடகா ஒற்றுமையுடன் உள்ளது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பாஜக மற்றும் என்டிஏ தலைவர்கள் அனைவரும் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஒரு குழுவை அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். மோதல்களுக்கு இடமே இல்லை. அந்த காலம் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. நாட்டின் சட்டத்தை மதிப்போம். இணைந்து செயல்பட்டு, நீரைப் பகிர்ந்து கொள்வோம். நம்மிடையே ஒற்றுமை உணர்வை மேலும் பலப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில், “தமிழகத்தின் காவிரி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நீர் கிடைப்பது தொடர்பாகவும், கர்நாடகாவின் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளால் விவசாய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் அச்சம் குறித்தும், மிக முக்கியமான இந்த விவகாரத்தை உடனடியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம், தமிழகத்துக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, நீங்கள் (பிரதமர் மோடி) உடனடியாகத் தலையிட்டு கீழ்க்காணும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கோரிக்கைகளின் விவரம் வருமாறு:
1. உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ / நிர்வாக அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
2. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிருவாக அல்லது தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டத்தைத் தொடரவேண்டாம் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.