செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மகளுக்கு பவுன்சர் நியமித்த தந்தை

செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மகளுக்கு பவுன்சர் நியமித்த தந்தை
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 24 மணி நேரமும் ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள் எடுப்பது, அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதை அவரது தந்தை கண்டித்தபோது அவர் கேட்கவில்லை. ஸ்மார்ட் போனுக்கும், சமூக வலைதளங்களுக்கும் அவர் அடிமையாகிவிட்டார். இந்நிலையில் அவர் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் பவுன்சர்களை அந்த தந்தை நியமித்துள்ளார்.

இது குறித்து அகமதாபாத் நகரைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் முருகேஷ் வைஷ்ணவ் கூறும்போது, “அந்த சிறுமி புகைப்படங்களை பகிரும் வலைதளத்துக்கு அடிமையாகிவிட்டார். ஆன்-லைனில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேசி வந்தார். இதைத் தடுக்க மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் 4 பவுன்சர்களை அந்தத் தந்தை நியமித்திருந்தார்.

ஆனாலும், அவர் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர் என்னிடம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருந்து, மாத்திரைகளைத் தந்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இதுகுறித்து ஃபோர்ஸ்11 செக்யூரிட்டி நிறுவனத் தலைவர் நிகில் பாண்டே கூறும்போது, “செல்லப்பிராணியான நாயை தனது 17 வயது மகன் அடித்து உதைக்கிறான் என்ற புகாரின் பேரில் அதைத் தடுக்க 8 பவுன்சர்களை நியமிக்குமாறு சிறுவனின் தந்தை கேட்டுக் கொண்டார். சுமார் 9 மாதங்களாக 2 ஷிப்டுகளில் 8 பவுன்சர்கள் அந்தப் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்” என்றார்.

அதேபோல தங்களது குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுப்பதை நோக்கிலும் பவுன்சர்களைக் கேட்கும் பெற்றோர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று அகமதாபாத்தில் செக்யூரிட்டி ஏஜென்சியை நடத்தி வரும் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மகளுக்கு பவுன்சர் நியமித்த தந்தை
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in