

புதுடெல்லி: பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (என்சிஆர்) பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே பட்டாசுகளை வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஷ்வர் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் கூறும்போது, “பட்டாசுகளின் நச்சுக்காற்று வளிமண்டலத்தில் 3 மாதம் வரை நிலைத்திருக்கும். தசரா பண்டிகையைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு 179-லிருந்து 245 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது 2 நாட்கள் மட்டும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதியளித்தபோது காற்று மாசு 1000 புள்ளிகளைக் கடந்தது. எனவே பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்” என்றனர்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் கூறும்போது, சிவகாசி உற்பத்தியாளர்கள் உரிமம் பெற்று அரசு அனுமதித்துள்ள அளவிலேயே ரசாயனங்களைப் பயன்படுத்திப் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கின்றனர். காற்று மாசை தடுக்க போலி தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்யலாம். ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தடை விதிப்பது சாமானிய மக்களைப் பாதிக்கும்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: தீபாவளி கொண்டாட்டம் என்பது மக்களின் மனநிலை சார்ந்தது, மக்களாகவே முன்வந்து படிப்படியாகப் பட்டாசு வெடிப்பதை குறைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
விளக்குகளை ஏற்றி வழிபடுவதே உண்மையான மரபு ஆகும். கிரிக்கெட் பிரபலம் விராட் கோலி போன்றவர்களை அணுகி தீபாவளியை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பட்டாசுகளுக்கு ஒரேயடியாக முழுமையாக தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. அது சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
பண்டிகையின் இரு நாட்களில் அதிகாரிகள் தங்களின் சொந்தக் கொண்டாட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். பட்டாசு விதிமீறல் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நிலைமை சீராகும். டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் பட்டாசு வெடிப்பது குறித்து ஓரிரு நாட்களில் சமநிலையான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பேரியம் அளவு 60% குறைப்பு
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, "பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பில் ‘பேரியம்’ என்ற வேதிப்பொருளின் பயன்பாடு 45% முதல் 60% வரை குறைக்கப்பட்டுள்ளது.
பேரியம் பயன்பாடு விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.