ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை

ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை
Updated on
2 min read

டெல்லியின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் ‘ஜந்தர் மந்தர்’ பிரம்மாண்ட கற்களால் வடிக்கப்பட்ட வானியல் கருவிகள் மூலம் கோள்களின் நகர்வுகளையும் நேரத்தையும் கணித்த ஓர் அறிவியல் வரலாற்று மையம். ஆனால், இன்று மக்கள் திரளாக ஒன்றுகூடித் தங்களின் உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பும் முதன்மையான போராட்டக் களமாக இது உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் நீட் முறைகேடு தொடர்பாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இங்கு ஒரு மாத காலம் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தர் பகுதியில் இனிமேல் போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘போராட்டக் களமாக ஜந்தர் மந்தர் இருப்பதையும் மறுபரிசீலனை செய்யலாம்’ எனத் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ‘ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தை ஏன் முழுமையாக மூடக் கூடாது?’ என்று மத்திய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘ஜனநாயக ரீதியிலான அமைதி வழி போராட்டமோ அல்லது வேறு போராட்டங்களாக இருந்தாலும், அதற்காக ஒரு நகரமே ஸ்தம்பிக்க வேண்டுமா? மக்கள் அவதிக்குள்ளாக வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் மகாஜன், எந்த வழியான போராட்டங்களாக இருந்தாலும் அதற்காக ஒரு நகரத்தையே பணயம் வைக்க கூடாது என்பதுதான் தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

அறிவியல் ஆய்வுக் கூடமாக இருந்த ஜந்தர் மந்தர், எவ்வாறு போராட்டங்கள் நடத்தும் இடமாக மாறியது என்பது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.

ஜந்தர் மந்தரின் வரலாறு

டெல்லி மக்களின் போராட்டக் களமாக ஜந்தர் மந்தர் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், இதன் தொடக்கம் முற்றிலும் அறிவியல் சார்ந்தது. மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங், வடமாநிலங்களில் கோள்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக 5 அறிவியல் ஆய்வுக் கூடங்களை உருவாக்கினார். அதில் முதலாவதாகக் கட்டப்பட்டதுதான் டெல்லி ஜந்தர் மந்தர் ஆய்வுக் கூடம். இது 1731-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

டெல்லியில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் கூடம், இந்தியாவின் அறிவியல் கட்டமைப்புக்கு மிக முக்கியத் தொடக்கப் புள்ளியாக மாறியது. இங்கு அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களும் அவற்றின் வடிவங்களும் பிற வரலாற்றுச் சின்னங்களில் இருந்து முற்றிலும் தனித்து நிற்பவை.

சூரியனின் இயக்கத்தைக் கண்காணிப்பது, நேரத்தைத் தீர்மானிப்பது மற்றும் கோள்களின் அமைவிடங்களைக் கண்டறிவது வரை பல பெரிய அளவிலான வானியல் கருவிகள் இங்கு உள்ளன. இது ஒரு கோட்டையோ அல்லது அரண்மனையோ அல்ல. மாறாக, இது ஓர் அறிவியல் சார்ந்த நினைவுச் சின்னம்.

ஜந்தர் மந்தர் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

டெல்லியின் மத்தியப் பகுதியில் ஜந்தர் மந்தர் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து 3 கி.மீ தொலைவுக்குள் நாடாளுமன்றமும் ஏராளமான மத்திய அரசு அலுவலகங்களும் செயல்படுவதால் ஜந்தர் மந்தர் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்கு வெளியே அமைந்திருந்தாலும், அதிகார மையத்தின் பார்வைக்கு உட்பட்ட வகையில் போராட்டக்காரர்களைப் போராட இது அனுமதிக்கிறது.

அதிகாரபூர்வ போராட்டக் களமாக மாறியது எப்படி?

ஜந்தர் மந்தர் பகுதி எப்போதுமே போராட்டக் களமாக இருந்ததில்லை. சுதந்திரத்துக்குப் பின் நாட்டை உலுக்கிய பல போராட்டங்களும் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள ‘போட் கிளப்’ பகுதியில்தான் நடந்தன.

1988-ஆம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மகேந்திர சிங் திகைத், விவசாயிகளைத் திரட்டி போட் கிளப் பகுதியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டம்தான் பாரதிய கிசான் யூனியன் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பான போராட்டங்களும் போட் கிளப் பகுதியிலேயே நடந்தன.

இதனால் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதும், போக்குவரத்தைச் சீரமைப்பதும், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதும் காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக மாறின. இந்தக் காரணங்களால் 1993-ஆம் ஆண்டு டெல்லியில் அதிகாரபூர்வ போராட்டக் களமாக ஜந்தர் மந்தரை டெல்லி போலிஸார் அறிவித்தனர்.

2003-ல் காவல் துறை உத்தரவு

2003-ல் டெல்லி போலீஸார் பிறப்பித்த உத்தரவில், ‘ஜந்தர் மந்தர் சாலை மற்றும் ராம்லீலா மைதானம் ஆகியவற்றில்தான் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும். 5,000 பேருக்குக் குறைவாக இருந்தால் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தலாம். 5,000-க்கும் அதிகமாக, 50,000 பேருக்குள் இருந்தால் ராம்லீலா மைதானத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்’ என அறிவிக்கப்பட்டது.

2011-12ல் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம், 2012-ல் நிர்பயாவுக்கு ஆதரவான போராட்டம், முன்னாள் ராணுவ வீரர்களின் ‘ஒரே தகுதி, ஒரே ஓய்வூதியம்’ போராட்டம், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டங்கள் என பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் இங்குதான் நடந்தன. இங்கு போராட்டம் நடத்தும்போது, ஆட்சியாளர்களின் கவனத்திற்குத் தங்களின் கோரிக்கைகள் நேரடியாகச் சென்று சேரும் என மக்கள் நம்பினர்.

நீதிமன்றங்களின் தலையீடுகளும் இன்றைய நிலையும்

அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட ஒலி மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, 2017-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இங்குப் போராடத் தடை விதித்தது. இருப்பினும், 2018-ல் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘போராட்டத்தை முழுமையாகத் தடை செய்ய முடியாது; குடியிருப்புவாசிகளின் நிம்மதிக்கும் போராடுபவர்களின் உரிமைக்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டும்’ என உத்தரவிட்டது.

தற்போது டெல்லி காவல் துறையின் அனுமதியுடன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தொடர்கின்றன. அதேநேரத்தில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராம்லீலா மைதானத்தில், வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 கட்டணம் செலுத்தியும் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த முடியும்.

ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை
அவதூறு முதல் ஆபாச கருத்துகள் வரை: குற்றத் தன்மைகளும், சட்டங்களும் - ஒரு பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in