

இந்தியாவில் ஒருவரை அவதூறாக, அநாகரிகமாகப் பேசுவதும் கருத்துகளைத் தெரிவிப்பதும் எந்த அளவுக்கு குற்றமா? இவ்வாறு பேசுவது குறித்துப் புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பழைய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் என்ன கூறுகின்றன, நீதிமன்றத் தீர்ப்புகள் எதை உணர்த்துகின்றன என்பதை சற்று தெளிவாகப் பார்க்கலாம்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் முறைகேட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பலர் மீது, அநாகரிகமான, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகின. எந்தக் காவல் நிலையத்திலும் பதிவு செய்யக்கூடிய வகையில் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.
அந்த முதல் தகவல் அறிக்கையில் பிஎன்எஸ் பிரிவு 352 (உள்நோக்கத்துடன் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பேசுதல்), 353(1) (பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்), பிரிவு 356(1) (அவதூறு பரப்புதல்) ஆகியவை சேர்க்கப்பட்டு, பேச்சுக்கள் ‘வெறுப்பைத் தூண்டுவதாகவும் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கில் அமைந்திருப்பதாகவும்’ குற்றம் சாட்டப்பட்டது.
இதை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் தரக்குறைவான அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரு குற்றச் செயலாகுமா?
பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் அவதூறான பேச்சு
பிஎன்எஸ் சட்டத்தின் கீழ், தரக்குறைவான அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரு தனிப்பட்ட குற்றமாகக் கருதப்படுவது இல்லை. மாறாக, அது குற்றமா என்பது அதன் தன்மை, சூழல் மற்றும் விளைவுகளைப் பொறுத்தே அமைகிறது.
பிஎன்எஸ் சட்டப் பிரிவு 352 (பழைய ஐபிசி பிரிவு 504) கூறுவது: ‘உள்நோக்கத்துடன் ஒருவரைப் புண்படுத்தி, அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அல்லது ஆத்திரமூட்டும் வகையில் பேசுதல்’ என்பதாகும்.
அவமதிப்பு செய்ய வேண்டுமென்றே பேசுவது, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுவது அல்லது வேறொரு குற்றத்தைச் செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட நபரைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றங்களாகும். வெறும் தரக்குறைவாகப் பேசுவது மட்டும் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் வராது. ஆனால், இந்தக் குற்றத்தை செய்தால் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
அதேசமயம், அவதூறான வார்த்தைகள் ஒரு நபரின் உயிருக்கோ, மாண்புக்கோ, மரியாதைக்கோ அச்சுறுத்தும் வகையில் இருந்தால், அது பிரிவு 351-ன் கீழ் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.
பிஎன்எஸ் பிரிவு 353
பிஎன்எஸ் பிரிவு 353 (பழைய ஐபிசி பிரிவு 505), உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதைக் குற்றமாகக் கருதுகிறது. அரசுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுவது, பொது அமைதியைக் குலைப்பது, இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்துவது போல் பேசுவது ஆகிய கருத்துகளும் இதில் அடங்கும்.
பிஎன்எஸ் பிரிவு 356(1)
பிஎன்எஸ் பிரிவு 356(1) (பழைய ஐபிசி பிரிவு 499), ஒரு நபரின் நற்பெயரையும் மரியாதையையும் வேண்டுமென்றே குலைக்கும் நோக்கில் பொய்களைப் பரப்புவது, ஊடகங்களில் குற்றச்சாட்டு கூறுவது ஆகியவற்றை அவதூறு குற்றமாகக் கருதுகிறது.
கிரிமினல் அவதூறுகளுக்கு சில முக்கிய விதிவிலக்குகளையும் பிஎன்எஸ் சட்டம் வழங்குகிறது:
* பொதுநலன் கருதிச் சொல்லப்படும் உண்மையான குற்றச்சாட்டுகள்.
* அரசு ஊழியர்கள் அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அவர்களின் செயல் குறித்த நியாயமான விமர்சனங்கள்.
* நீதிமன்ற நடவடிக்கைகளின் உண்மையான அறிக்கைகளை வெளியிடுதல்.
* அரசின் செயல்பாடுகள் குறித்த நியாயமான விமர்சனம்.
* அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் கொண்டவர் தெரிவிக்கும் கண்டனம்.
* தகுதியுள்ள அதிகாரிகளிடம் நல்லெண்ணத்துடன் கூறப்படும் புகார்கள்.
* தன்னுடைய அல்லது பிறரின் நலன்களைப் பாதுகாக்கக் கூறப்படும் புகார்கள்.
* மக்களின் நன்மைக்காக நல்ல நோக்கத்துடன் விடுக்கப்படும் எச்சரிக்கைகள்.
பெண்களுக்கு எதிரான வார்த்தைகள்
பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கில் பேசுதல், அவதூறான சொற்கள், சைகைகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு முந்தைய ஐபிசி பிரிவு 509-க்கு இணையாக பிஎன்எஸ் பிரிவு 79 பொருந்தும்.
நீதிமன்றங்கள் என்ன கூறுகின்றன?
தெலங்கானா அரசு - ‘நல்ல பாலு @ துருகாம் சஷிதர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது: ‘குற்றஞ்சாட்டப்பட்ட நபர், சமூக ஊடகப் பதிவிலோ மேடைப் பேச்சிலோ யாரையாவது புண்படுத்தினாரா அல்லது அவதூறு செய்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு இல்லாமல் காவல் துறையினர் எந்திரத்தனமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது.
இரு தரப்பினரிடையே பகையை வளர்த்தல், வன்முறை, வெறுப்புணர்வு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தால் மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். கடுமையான மற்றும் விமர்சன பேச்சுகளுக்கு எதிராக வழக்கமான குற்றவியல் பிரிவுகளைப் பயன்படுத்த முடியாது.’
அதேபோல் டிஎஸ்பி மற்றும் சுப்பிரமணியன் வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘ஆபாசம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் அளித்தது. ‘பேசிய வார்த்தைகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுபவையாகவோ அல்லது எதிரில் இருப்பவர்களின் மனதைச் சீரழிப்பவையாகவோ இருக்க வேண்டும். மேலும், அந்த வார்த்தை மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். இவை நிரூபிக்கப்பட்டால், பிஎன்எஸ் பிரிவு 296-ன் கீழ் அது ஆபாசக் குற்றம்.’
உத்தரப் பிரதேச அரசு - முகமது வாஜித் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறுகையில், ‘கடினமான சொற்களைப் பேசுவது, கண்ணியக் குறைவு, முரட்டுத்தனமாகப் பேசுவது ஆகியவை சட்டத்தின் பார்வையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக ஆகாது. ஒருவர் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசாவிட்டாலோ, குற்றத்தைத் தூண்டும் வகையில் பேச்சு அமையாவிட்டாலோ, அது பிஎன்எஸ் பிரிவு 352-ன் கீழ் குற்றமாகக் கருதப்படாது.’