

புதுடெல்லி: இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதல் திட்டங்களுக்கு ராணுவ தளவாட கொள்முதல் குழு (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ தளவாட கொள்முதல் குழு (டிஏசி) கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ராணுவத்தின் தேவைகளுக்காக ரசாயன உயிரியல் கதிர்வீச்சு மற்றும் அணுஆயுத உளவு வாகனங்கள் (சிபிஆர்என்), அதிவேக இயங்கு வாகனங்கள், தானியங்கி வெடிபொருள் புதைக்கும் இயந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் , ‘ட்ரால்' டாங்கிகள் மற்றும் ‘சர்வத்ரா' பால அமைப்புகள் ஆகியவற்றை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கதிர்வீச்சு மற்றும் ரசாயனப் பாதிப்புள்ள பகுதிகளைக் கண்டறிய சிபிஆர்என் வாகனங்கள் உதவும். ‘சர்வத்ரா' பால அமைப்புகள் மற்றும் ட்ரால் டாங்கிகள் கடினமான நிலப்பரப்புகளில் ராணுவப் படைகளின் விரைவான நகர்வுக்கு வழிவகுக்கும்.
இந்தியக் கடற்படைக்காக ஆருத்ரா ரேடார்களைக் கொள்முதல் செய்யவும், போர்க்கப்பல்களின் உந்துவிசைக்கு பயன்படும் மரைன் காஸ் டர்பைன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கம் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.