முட்டை, பால், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு ஏன்? - புரதப் பணவீக்கமும் பின்னணியும்

முட்டை, பால், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு ஏன்? - புரதப் பணவீக்கமும் பின்னணியும்
Updated on
3 min read

ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது புள்ளி விபரங்கள் தரும் எண்களில் இல்லை; அந்நாட்டு மக்களின் உணவுத்தட்டில் நிறைந்துள்ள புரதச்சத்தின் அளவில்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பர் நிபுணர்கள்.

மக்களுக்கு கிடைக்கும் புரதச்சத்துதான் அவர்களின் வாங்கும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதை உணர்த்தும் சரியான குறியீடு. ஆனால், இன்று நடுத்தரக் குடும்பங்களின் புரத மூலங்களான முட்டை, பால், கோழி இறைச்சி ஆகிய மூன்றுமே அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறத் தொடங்கியுள்ளன.

பொருளாதார வல்லுநர்கள் இதை ‘உணவுப் பணவீக்கம்’ என்று கடந்து செல்லாமல், ‘புரதப் பணவீக்கம்’ (Protein Inflation) என்று எச்சரிக்கிறார்கள். புரதச்சத்து என்பது பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி, வாழ்க்கைத் தரம் மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் குறியீடாகவும் கருதப்படுகிறது.

நாட்டின் பணவீக்கக் கணக்கீட்டில் உணவுப் பொருட்களின் பங்கு 46 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில், பால் மற்றும் புரத உணவுகளின் தொடர் விலை ஏற்றத்தால் உண்டான பணவீக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு முடிவுகளையும் முடக்கிப்போட்டுள்ளது.

இந்த விலை உயர்வு என்பது ஏதோ ஒரு கடையில் நடக்கும் சிறு மாற்றமல்ல; மத்தியில் ஆளும் அரசின் வேளாண், சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் கொள்கைகளின் ஒட்டு மொத்தப் பிரதிபலிப்பு. இதன் பொருளாதாரப் பின்னணி என்ன, இனி விலைவாசி குறையுமா அல்லது இன்னும் உயருமா என விரிவாகப் பார்க்கலாம்.

புரதச்சத்து உணவுகளின் விலை ஏன் உயர்கிறது?

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு மாவுச்சத்து (Carbohydrates) மிகவும் அவசியம். இது பெரும்பாலும் மக்காச்சோளத்திலிருந்தே பெறப்படுகிறது. பிராய்லர் கோழித் தீவனத்தில் 55 சதவீதம் முதல் 65 சதவீதமும், முட்டைக்கோழித் தீவனத்தில் 50 சதவீதம் முதல் 60 சதவீதமும், கால்நடைத் தீவனத்தில் 20 சதவீதம் வரை மக்காச்சோளம் இடம்பெறுகிறது.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் சந்தையில் மக்காச்சோளத்தின் சராசரி விலை, 2025 ஆகஸ்டில் ரூ.2,537-லிருந்து ஓர் ஆண்டுக்குள் ரூ.2,759-ஆக அதிகரித்துள்ளது (டன்னுக்கு ரூ.222 உயர்வு). அதேபோல இந்தூர் சந்தையில் சோயாபீன் புண்ணாக்கு விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டன்னுக்கு ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. கடலைப்புண்ணாக்கு டன்னுக்கு ரூ.14,000, கடுகுப் புண்ணாக்கு ரூ.8,000 என உயர்ந்துள்ளன. இச்செலவை சமாளிக்க வேறு வழி தெரியாமல் உற்பத்தியாளர்கள் அவைகளை  நுகர்வோர் மீதே சுமத்துகிறார்கள்.

விலை குறையாமைக்கு காரணங்கள்:

1.தீவனச் செலவு: பராமரிப்புச் செலவில் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தீவனத்துக்கே செலவாகிறது. தீவனத்தின் முக்கிய மூலப்பொருட்களான சோயாபீன், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், அது தொடர்பான புண்ணாக்கு விலையும் உயர்ந்துள்ளது.

2.எத்தனால் கொள்கை: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்துக்காக மக்காச்சோளம் பெருமளவில் திருப்பப்படுவதால், தீவனச் சந்தையில் மக்காச்சோளத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

3.பருவநிலை மாற்றம்: கோடை வெப்பம் மற்றும் சீரற்ற பருவமழையால் கோழிகள் நோயுற்று இறப்பதும், முட்டையிடும் திறன் குறைவதும் அதிகரித்துள்ளது. மாடுகளின் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

4.கொள்முதல் விலை உயர்வு: உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கத் தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேச அரசுகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதால் சில்லறை விலையும் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயரும்போது, சில்லறை விற்பனை விலையும் இயல்பாக உயர்கிறது.

5.போக்குவரத்துச் செலவு: எரிபொருள் விலை மாற்றத்தால் போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகள் அதிகரித்துள்ளன.

முட்டை விலை அதிகரிப்பு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) வழிகாட்டுதலின்படி டெல்லியில் 100 முட்டைகள் மொத்த விலையில் ஒன்று ரூ.6-க்கு விற்கப்பட்டாலும், சில்லறை விற்பனையில் ரூ.7 முதல் ரூ.9 வரை விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டை ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சிந்தாவர் கூறுகையில், “ஜூலை மாதத்தில் 100 முட்டைகளின் சராசரி விலை ரூ.670-ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட 38 சதவீதம் அதிகரித்துள்ளது. தீவனப் பொருட்கள் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.32 வரை உயர்ந்ததால் உற்பத்தியாளர்களால் விலையைக் குறைக்க முடியவில்லை.

தீவனச் செலவே 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வரும்போது அவர்களால் எவ்வாறு விலையைக் குறைக்க முடியும்?” என்றார். பனிக்காலத்தில் தேவை அதிகரிப்பதால் தீபாவளிக்குப் பின் முட்டை விலை மேலும் உயரக்கூடும்.

பண்டிகை காலமும் அச்சுறுத்தும் விலைகளும்

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம் தொடங்குகிறது. மேலும் மழை, பனிக்காலம் வருவதால், கோழி இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றின் விலை குறுகிய காலத்தில் சற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வரவிருக்கும் தீபாவளி, கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் குளிர்காலத்தில் பொதுவாக முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கும். தீவனச் செலவு குறையாத வரை பண்ணையாளர்களால் தங்களின் உற்பத்தி பொருள்களை குறைந்த விலைக்கு விற்க முடியாது. எனவே, விலையில் பெரிய அளவு வீழ்ச்சி இருக்காது; மாறாக, நிலையாக இருக்கும் அல்லது சிறிதளவு உயரக்கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசின் நடவடிக்கைகள் என்ன

அமெரிக்க வேளாண் துறையின் (USDA) கணிப்பின்படி, இந்தியாவின் மக்காச்சோள விளைச்சல் 50 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறையக்கூடும். இதனால் சோயாபீன், மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரிகளைக் குறைத்து, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கலாம். எத்தனால் உற்பத்திக்கான தானிய அளவைக் கட்டுப்படுத்தி, கால்நடைத் தீவனத்துக்கு முன்னுரிமை அளிக்கவும் வாய்ப்புள்ளது.

பணவீக்கம் அதிகரிக்குமா?

சில்லறைப் பணவீக்கக் கணக்கீட்டில் (CPI) உணவுப் பொருட்களின் பங்கு 46 சதவீதமாக இருக்கிறது. பால், முட்டை, இறைச்சியில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ‘புரதப் பணவீக்கத்தை’ ஏற்படுத்தி, ஒட்டுமொத்தச் சில்லறைப் பணவீக்கத்தையும் (Headline Inflation) உயர்த்தும்.

உணவுப் பணவீக்கம் தொடர்ந்து நீடித்தால், ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதும் கடினம். இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் வாங்கியிருப்போர் மாதாந்திரத் தவணை செலுத்துவது கூடுதல் சுமையாகவே நீடிக்கும்.

விலைவாசி உயர்வு என்பது தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பொருளாதார நிலைமை. தீவன மூலப்பொருட்களின் வரத்து அதிகரித்து, அரசின் எரிபொருள் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் வரை, சாமானிய மக்கள் தங்கள் உணவுத்தட்டின் புரதப் பொருட்களை சற்று தியாகம் செய்ய வேண்டியதுதான்.

முட்டை, பால், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு ஏன்? - புரதப் பணவீக்கமும் பின்னணியும்
அமெரிக்காவில் இருப்பு வைத்த தங்கத்தை லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியது ஏன்? - ஓர் ‘அரசியல்’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in