

கோட்டயம்: கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒடுக்க கலால் மற்றும் மாநில உள்துறை அமைச்சகம் இணைந்து ‘ஆபரேஷன் தண்டர்’ என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வாகத்தானம் மணிகண்டபுரம் கோயில் வளாகத்தில் உள்ள மூடிய வழிப்பாதையின் அருகே 2 கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து கோயில் ஊழியர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து, கலால் அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை ஆய்வாளர் தர்ஷக் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோயில் வளாகத்தில் வளர்ந்திருந்த அந்த இரண்டு செடிகளையும் ஆய்வு செய்து அவை கஞ்சா செடிகள் என்பதை உறுதி செய்தனர்.
அந்த செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட செடிகள் முறையே 15.5 சென்டி மீட்டர் மற்றும் 13 சென்டி மீட்டர் உயரம் கொண்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் இந்தக் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் பொது மக்களின் வருகைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அப்போது கோவிலுக்கு வந்த யாரோ ஒரு நபர், கஞ்சாவைப் பயன்படுத்திய பிறகு அதன் எஞ்சிய பகுதிகளை அங்கேயே வீசிச் சென்றதால் இந்த செடி வளர்ந்திருக்காலம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இது குறித்து கலால் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது அவர், ”கேரளாவை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு. இதற்காக உள்துறை அமைச்சகம், சுகாதாரம், எக்சைஸ் (கலால்) மற்றும் கல்வித் துறைகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது புதிய தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்” என்றார்.