

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் மாணவர்களுடன் இணைந்து யோகாசனம் செய்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். படம்: ஜெ.மனோகரன்
கோவை: பொது மக்கள் அனைவரும் நாள்தோறும் யோகா செய்ய வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்வில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 1,564 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஆளுநர் பேசியதாவது: யோகா என்பதை ஒருநாள் மட்டும் கொண்டாட்டமாக கருதாமல், ஆண்டு முழுவதும் தினமும் கடைபிடிக்க வேண்டும். பிரதமர் மோடியின் முன்னெடுப்பால் சர்வதேச அளவில் யோகா கலை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனித குல நன்மைக்காக நமது ரிஷிகளும், முனிகளும் வழங்கிய யோகா கலை, உலகுக்கு இந்தியா அளித்த கொடையாகும். உடலும், ஆன்மாவும் ஒரு சேர பேணுவதே உண்மையான ஆரோக்கியம்.
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம் மற்றும் வலிமையான ஆன்மாவுக்காக யோகாவை அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் யோகா பலன் அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் மற்றும் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றை ஆளுநர் நட்டு வைத்தார். முன்னதாக, மேற்கு வங்கத்தில் பிரதமர் பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டதை அனைவரும் பார்வையிட்டனர்.