

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்சத்பாய் கோவிந்த்பாய் பர்மர் வெற்றி பெற்றார். நாகாலாந்து கோரிடாங் தொகுதியில் பாஜக வேட்பாளர் டவோசியர் ஐ இம்சென் வெற்றி பெற்றார்.
திரிபுராவின் தரம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜஹர் சக்ரவர்த்தி வென்றார். மகாராஷ்டிராவின் ராகுரி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அக்ஷய் சிவாஜிராவ் வெற்றி பெற்றார். பாராமதி தொகுதியில் அஜித் பவார் மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் 2-ல் வெற்றி
கர்நாடகாவில் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் உமேஷ் மேத்தி (பாகல்கோட்டை), சமர்த் சாமனுர் மல்லிகார்ஜூன் (தாவணகெரே தெற்கு) களமிறக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் வீரபத்ரையா சரடிமத் (பாகல்கோட்டை), சீனிவாசா தாசகரியப்பா (தாவணகெரே தெற்கு) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.
அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாகல்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உமேஷ் மேத்தி 98 ஆயிரத்து 919 வாக்குகள் பெற்று, வீரபத்ரையா சரடிமத்தை 22 ஆயிரத்து 323 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சமர்த் சாமனுர் மல்லிகார்ஜூன் 69,578 வாக்குகள் பெற்று, சீனிவாசா தாசகரியப்பாவை (பாஜக) 5,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கர்நாடகாவில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டதால் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.