தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்! - விசில் புரட்சி மூலம் திமுக ஆட்சியை வீழ்த்தியது தவெக

முதல் தேர்தலிலேயே வரலாறு காணாத வெற்றி
தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்! - விசில் புரட்சி மூலம் திமுக ஆட்சியை வீழ்த்தியது தவெக

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

Updated on
4 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்க உள்​ளார். கொளத்​தூர் தொகு​தி​யில் தொடர்ந்து மூன்று முறை​யாக வெற்றி பெற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இத்​தேர்தலில் தோல்​வியடைந்​தது திமுக​வினரிடம் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது எடப்​பாடி தொகுதியில் வெற்​றியை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். காரைக்குடி​யில் போட்​டி​யிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்​கட்சி வேட்​பாளர்​கள் அனை​வரும் டெபாசிட் இழந்​துள்​ளனர்.

நடிப்​பில் இருந்து அரசி​யலுக்கு மாறி, தவெக கட்​சி​யைத் தொடங்கிய விஜய், களம்​கண்ட முதல் தேர்​தலிலேயே எந்த கட்சியுட​னும் கூட்​டணி சேராமல் தனித்​துப் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ள​தால், அக்​கட்​சி​யினர் மிகுந்த உற்​சாகம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்டமாக கடந்த ஏப்​.23-ம் தேதி நடந்​தது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக ஆகிய கட்​சிகள் இடையே நான்​கு​முனைப் போட்டி நில​வியது. இந்​நிலை​யில், தேர்​தல் முடிவு​கள் நேற்று அறிவிக்கப்பட்​டன. வாக்கு எண்​ணிக்கை தொடங்​கியது முதலே முன்​னிலை​யில் இருந்து வந்த தவெக, 108 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 1967 முதல், திமுக, அதி​முக ஆகிய இரு திராவிடக் கட்​சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்​தன. 1967-ல் ஆட்சியை இழந்த காங்​கிரஸ், அதன் பிறகு தமிழகத்​தில் ஆட்​சிக்கு வர முடிய​வில்​லை. இந்த இருகட்​சிகளுக்​கும் மாற்​றாக உரு​வான பாமக, மதி​முக, தேமு​திக, மநீம போன்ற கட்​சிகளும் தனித்​துப் போட்​டி​யிட முடி​யாமல், இந்த இரு கட்​சிகளு​டன்​தான் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​தித்து வரு​கின்​றன.

அதனால், திமுக, அதி​முக​வுக்கு மாற்​றாக தனிப்​பெருங்​கட்​சி​யாக இக்​கட்​சிகளால் வரமுடிய​வில்​லை. சீமானின் நாதக யாருடனும் கூட்​டணி அமைக்​கா​விட்​டாலும், இது​வரை ஒரு இடத்​தில்​கூட வெற்றி பெற முடி​யாத நிலை​யில்​தான் உள்​ளது.

இந்தச் சூழலில், திரைத் துறை​யில் உச்ச நட்​சத்​திர​மாக, புகழின் உச்சி​யில் இருக்​கும் விஜய் கடந்த 2024 பிப்​.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்​சி​யைத் தொடங்​கி​னார்.

2024-ல் மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்ற போதி​லும், 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​தான் என் இலக்கு என்று அப்​போதே அறிவித்​தார் விஜய். எந்த கட்​சி​யுட​னும் கூட்​டணி அமைக்​கப்​போவ​தில்லை என்று தொடர்ந்து கூறிவந்த அவர், அவ்​வாறே 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனித்​துப் போட்​டி​யிட்​டார்.

“இவரும், மற்ற கட்​சிகளைப்​போல காணா​மல் போவார். அடுத்த தேர்​தலில் திரா​விடக் கட்​சிகளில் ஒன்​றுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​வார்” என்று அரசி​யல் விமர்​சகர்​கள் கூறி வந்​தனர். விஜய் ரசிகர்​களின் செயல்​பாடு​களும் விமர்​சனத்​துக்கு உள்​ளாகின.

இதற்​கிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்பவம், அக்​கட்​சிக்​கும், தலை​வர் விஜய்க்​கும் பெரிதும் பின்னடைவாக அமைந்​தது. அதன்​பிறகு, வீட்​டுக்​குள்​ளேயே பல நாட்​கள் முடங்கி இருந்​தார் விஜய்.

ஆனால், குறுகிய காலத்​திலேயே மீண்​டெழுந்த விஜய், அதி​காரத் தடைகளை எல்​லாம் தகர்த்​து, மீண்​டும் சூறாவளி சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​னார். அவர் பங்​கேற்​கும் கூட்​டங்​களுக்கு இளைஞர்​களும், பெண்​களும் அலைகடலென புறப்​பட்டு வந்​தனர்.

பெரும்​பாலும் பல தொகு​தி​களி​லும் சாமானியர்​களையே வேட்பாளராக அறி​வித்​தார் விஜய். பிர​தானக் கட்​சிகள் ஒரு ஓட்​டுக்கு ரூ.1,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்​கிய​தாக கூறப்​பட்ட நிலை​யில், தவெக வேட்​பாளர்​கள் பலரும் பிரச்​சா​ரத்​துக்​கு​கூட செல​விட முடி​யாதவர்​களாக இருந்​தனர். வாக்​குப்​ப​திவுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்​பு​களும் தவெக​வுக்கு சராசரி​யாக 20-25 இடங்கள் மட்​டுமே கிடைக்​கும் என்றன.

தனிப்​பெரும் ​கட்​சி​யான தவெக

இந்த சூழலில், நேற்று நடை​பெற்ற வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது, தொடக்​கம் முதலே தவெக​வினர் முன்​னிலை பெற்று வந்​தனர். 108 இடங்​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும் ​கட்​சி​யாக​வும் தவெக உரு​வெடுத்​துள்​ளது.

இதை தொடர்ந்​து, தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்க உள்ளார். பெரும்​பாலும் எளிய பின்​னணி கொண்ட தவெக வேட்பாளர்​கள், பாரம்​பரியமிக்க திரா​விடக் கட்சி வேட்​பாளர்​களை வீழ்த்​தி​யுள்​ளனர்.

<div class="paragraphs"><p>சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.</p></div>

சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.

தவெகவின் விசில் புரட்சி

இதற்​கிடையே, தவெக​வுக்கு ‘விசில்’ சின்​னம் ஒதுக்​கப்​பட்​டதும், அக்​கட்​சி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளது. விஜய் தொடங்​கி,

அக்​கட்சி வேட்​பாளர்​கள், நிர்​வாகி​கள், தொண்​டர்​கள், ரசிகர்​கள் அனை​வரும் பிரச்​சா​ரக் கூட்​டங்​களின்​போது உற்​சாகத்​துடன் ‘விசில்’ ஊதி​யது, அக்​கட்​சிக்கு மாபெரும் வெற்​றியை பெற்​றுத் தந்​துள்​ளது. தவெக​வின் இந்த விசில் புரட்​சி​யால், அசுர பலத்​துடன் ஆண்டு வந்த திமுக வீழ்த்​தப்​பட்​டுள்​ளது.

ரூ.8 ஆயிரம் கூப்​பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்வு உள்​ளிட்ட 500-க்​கும் மேற்​பட்ட வாக்​குறு​தி​கள் கொண்ட தேர்​தல் அறிக்​கையை திமுக வெளி​யிட்​டது. 3 மாத மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 உடன் கோடை​கால சிறப்பு உதவித் தொகை ரூ.2,000 என மொத்​தம் ரூ.5 ஆயிரத்தை தேர்​தலுக்கு முன்​பாக மகளிரின் வங்​கிக் கணக்​கில் திமுக அரசு வரவு வைத்​தது.

அதே​போல, அதி​முக சார்​பிலும் பல்​வேறு கவர்ச்​சிகர​மான வாக்​குறு​தி​கள் அளிக்​கப்​பட்​டன. இவற்​றைத் தாண்டி இந்த இருகட்சிகளையும் தவெக வீழ்த்தியுள்ளது. திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின், கொளத்​தூர் தொகு​தி​யில் தொடர்ச்​சி​யாக 3 முறை வெற்றி பெற்ற நிலை​யில், தற்​போதைய தேர்​தலில் அவர் தோல்வி அடைந்​துள்​ளார்.

கடந்த 2011-ல் திமுக​வில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​வர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்​றவர் என்று திமுக​வின​ரால் விமர்சிக்​கப்​பட்ட வி.எஸ்​.​பாபு​விடம் ஸ்டா​லின் வெற்றி வாய்ப்பை இழந்​துள்​ளார்.

அது மட்​டுமின்​றி, கட்​சி​யின் மூத்த தலை​வர் துரை​முரு​கன் உட்பட திமுக அமைச்​சர்​கள் பலரும் தவெக வேட்​பாளர்​களிடம் தோல்​வியை சந்​தித்​தது, திமுக​வினரிடம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் 1967-க்கு பிறகு, அடுத்​தடுத்த தேர்​தல்​களில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற ஒரே கட்சி அதி​முக​தான். எம்​ஜிஆர் காலத்​தி​லும், ஜெயலலிதா காலத்​தி​லும் இந்த சாதனை நிகழ்த்​தப்​பட்​டது.

அதி​முக​வின் 54 ஆண்​டு​கால வரலாற்​றில், இது​வரை அடுத்​தடுத்து இரு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக தோற்​றதே இல்லை ஆனால், இப்​போது விஜய் அலை​யில் சிக்​கி, 2-வது முறை​யாக ஆட்​சிக்கு வராமல் போனதுடன், 3-ம் இடத்​துக்கு செல்​லும் அளவுக்கு அதி​முக நிலைகுலைந்​திருப்​பது, தொண்​டர்களிடம் சோகத்தை ஏற்படுத்​தி​யுள்​ளது.

நாதக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

அனைத்து தேர்​தல்​கள் போல​வே, 2026 சட்​டப்​பேர​வைத் தேர்தலிலும் நாதக யாருட​னும் கூட்​டணி அமைக்​காமல் தனித்​துக் களம்​கண்​டது. ஆண்​களுக்​கும், பெண்​களுக்​கும் சம வாய்ப்பு அளித்து, நான்​கு​முனைப் போட்​டியை எதிர்​கொண்​டது. தான் ஆட்சிக்கு வந்​தால் இலவசங்​கள் கிடை​யாது என்று துணிச்​சலாக வாக்​குறு​தி​களை​யும் வெளி​யிட்​டார் அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்.

எனினும், தமிழகம் முழு​வதும் சுழன்​றடித்த ‘விஜய் அலை’​யில் நாதக வேட்​பாளர்​கள் அனை​வரும் 4-ம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது மட்​டுமின்​றி, சீமான் உட்பட அக்​கட்சி வேட்​பாளர்​கள் அனை​வரும் டெபாசிட்டை இழந்​துள்​ளனர்.

களம் கண்ட முதல் தேர்​தலிலேயே தவெக அமோக வெற்றி பெற்றுள்​ள​தால், அக்​கட்​சி​யினர் மிகுந்த உற்​சாகம் அடைந்துள்ளனர்​. தமிழகத்​தின்​ பல்​வேறு பகு​தி​களி​லும்​ கட்​சிக்​ கொடி​யுட​னும்​, ‘விசில்​’ ஊதி​யபடி​யும்​ அக்​கட்​சி​யினர்​ நேற்​று இரவு வரை பைக்​குகளில்​ சுற்​றியபடி இருந்​தனர்.

மெஜாரிட்டி ஆட்​சிக்குத் தேவை​யான 118 இடங்​கள் கிடைக்கவில்லை - விஜய்​யின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது.

எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்​தில் தற்​போது ‘தொங்கு சட்​டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம் ஆதரவு கோரு​வது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் தீவிர ஆலோசனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

தற்​போது தவெக முன்பு இரண்டு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஒன்று அதிமுக​வின் ஆதர​வைக் கோரு​வது. மற்​றொன்​று, திமுக கூட்டணிக் கட்​சிகளின் ஆதரவை கோரு​வது. அதி​முக தலைமையிலான கூட்​டணி 53 இடங்​களை கைப்​பற்​றி​யுள்​ளது.

ஒரு​வேளை அதி​முக ஆதரவு அளித்​தால் தவெக மிக எளி​தாக ஆட்சி அமைக்க முடி​யும். ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை விஜய் கடுமை​யாக விமர்​சித்துப் பேசினார். இந்த சூழலில், தற்போது பழனி​சாமி ஆதரவு அளிப்​பாரா என்​பது தெரிய​வில்​லை.

மற்​றொருபுறம், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக மற்​றும் கம்யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதர​வைப் பெற​வும் விஜய் திட்​ட​மிட்டு வரு​கிறார்.

இதற்​கிடையே, தவெக​வின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி, தொலைபேசி வாயி​லாக விஜய்​யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்​கள் கசிந்​துள்​ளன.

காங்​கிரஸ் மட்டுமின்றி, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அதி​முக கூட்​ட​ணி​யில் உள்ள பாமக ஆகிய​வற்​றுட​னும் பேச்​சு​வார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. பாமக தரப்​பில் இருந்து இது​வரை சாதக​மான பதில் வராத​தால், திரு​மாவளவன் தலை​மையி​லான விசிக​வுடன் பேச்​சு​வார்த்​தையைத் தொடங்​க​வும் விஜய் தரப்பு ஆர்​வம் காட்டி வரு​கிறது.

தேர்​தலுக்கு முன்​பு, கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வந்த நிலை​யில், கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு ‘ஆட்​சி​யிலும் அதி​காரத்​தி​லும் பங்​கு’ என்று விஜய் கூறிவந்​தார். அந்த எதிர்​பார்ப்​புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்​கப்​போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தவெக தலை​வர் விஜய்க்கு பிரதமர் மோடி, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

பிரதமர் மோடி: தவெக​வின் ஈர்க்​கக்​கடிய செயல்​திறனுக்கு எனது பாராட்​டு​கள். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு ஆதர​வளித்த வாக்காளர்​களுக்கு நன்​றி. தமிழக முன்​னேற்​றம் மற்​றும் மக்​கள் நலனுக்கான உதவி​களை மத்​திய அரசு தொடர்ந்து செய்​யும்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி: தமிழக தேர்​தலில் மாபெரும் வெற்றி பெற்​றதற்கு தவெக தலை​வர் விஜய்க்கு வாழ்த்துகள். இளைஞர்​களின் குரல் ஓங்கி ஓலித்​திருப்​பதை தேர்​தல் முடிவு​கள் பிர​திபலிக்​கின்​றன. இதை உதாசீனப்​படுத்​தி​விட முடியாது.

நடிகர் ரஜினிகாந்த்: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மநீம தலை​வர் கமல்​ஹாசன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், பாமக நிறு​வனர் ராம​தாஸ், தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்​கள் தமிழிசை, அண்​ணா​மலை, புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி உள்​ளிட்​டோரும்​ விஜய்க்​கு வாழ்த்​து தெரிவித்துள்ளனர்​.

தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்! - விசில் புரட்சி மூலம் திமுக ஆட்சியை வீழ்த்தியது தவெக
முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in