

புதுடெல்லி: மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர். மாநில மக்கள் தொகையில் 33% பேர் முஸ்லிம்கள் என்று முதல்வர் மம்தாவே கூறியிருக்கிறார். முஸ்லிம்கள் மேலும் அதிகரித்தால் இந்து வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் இந்துக்களுக்கான கடைசி வாய்ப்பு ஆகும். இந்துக்களை பாதுகாக்க இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது அவசியம். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்து வேட்பாளர்களைவிட முஸ்லிம் வேட்பாளர்களை அதிக அளவில் களம் இறக்குகிறது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற குரல் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே மேற்குவங்கத்தை பாதுகாக்க பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.