புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிப்பு

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிப்பு
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிப்பதால் ஒரே தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, கூடுதல் தொகுதிகளை யார் பெறுவது என்பதில் காங்கிரஸ் - திமுக இடையே தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். ஆனாலும், உடன்பாடு எட்டப்படவில்லை.

மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ் 16, திமுக 12, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் உறுதியாக இதுபற்றி அறிவிக்கவில்லை.

நேற்று முன்தினம் மாலை தொடங்கிய பேச்சுவார்த்தை, மனுதாக்கல் நிறைவடையும் நாளான நேற்று அதிகாலை வரை நீடித்தது. எனினும், நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, தட்டாஞ்சாவடி, உழவர்கரை, மங்கலம் ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த சூழலில், மனுதாக்கல் நிறைவு நாளான நேற்று ஒரே கூட்டணியில் உள்ளவர்களே ஒரே தொகுதியில் மனுதாக்கல் செய்தனர்.

கடந்த தேர்தலில் நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை ஆகிய தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டன. தட்டஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகியவை முறையே இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு வழங்கப்பட்டன. இந்த முறை இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்த காங்கிரஸ் பிரமுகர்களில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. குறிப்பிடத்தக்கவர். இவர் தட்டாஞ்சாவடியில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதேநேரம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் கடந்த 2021 தேர்தல் நிலைப்பாட்டின் அடிப்படையில், மேற்கண்ட 5 தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்துள்ளன.

இந்த குழப்பங்கள் பற்றி இண்டியா கூட்டணித் தலைவர்களிடம் கேட்டதற்கு, “தற்போது முக்கிய இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் கட்சிப் படிவம் தந்து மனுதாக்கல் செய்துள்ளனர். 26-ம் தேதி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதற்குள் பேசி, தீர்வு காண்போம். அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தவிர இதர வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெறுவார்கள்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, நேற்று மாலை வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை முடிவில் பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கி கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், “இந்த தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கூட்டணிக்குள் பேசி முடிவெடுப்போம். வைத்திலிங்கம் திடீரென வேட்புமனு தாக்கல் செய்ததால் பேச்சுவார்த்தை தாமதம் ஆனது. காங்கிரஸ் கட்சியின் முடிவால்தான் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது எந்தப் பிரச்சினையும் கூட்டணியில் இல்லை. காலாப்பட்டு, நெல்லித்தோப்பு உள்ளிட்ட தொகுதிகளின் பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம்’’ என்றார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, காங்கிரஸ் 14, திமுக 12, இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா ஒரு தொகுதி என முடிவாகலாம் என தெரிகிறது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் நேற்று 326 பேர் 380 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 30 தொகுதிகளில் மொத்தம் 445 பேர் 515 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in