

மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி: தீவிரவாதி என்ற பிரதமர் மோடிக்கு எதிரான கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேற்று தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். பிரதமர் மோடியை ‘தீவிரவாதி’ என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தது குறித்து புகார் அளித்தனர்.
அப்போது, “பகிரங்க மன்னிப்பு கோருமாறு கார்கேவுக்கு உத்தரவிட வேண்டும், தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சார கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மேலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் அவரது கருத்து மேலும் பரவுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அவர்கள் கோரினர்.
பிறகு செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜு கூறுகையில், “கார்கேவின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. இது, இந்திய அரசியலில் முன்னெப்போதும் இல்லாதது. தேர்தல் ஆணையத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ஒரு மூத்த தலைவர் இத்தகைய வார்த்தையை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது ஒரு தவறான போக்கை காட்டுகிறது” என்றார்.
தமிழ்நாட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது மல்லிகார்ஜுன கார்கே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், மக்களையும் அரசியல் கட்சிகளையும் பிரதமர் மோடி பயமுறுத்துகிறார் என்றே தான் குறிப்பிட்டதாகவும் அவரை தீவிரவாதி என்று ஒருபோதும் அழைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாஜகவின் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.