இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா - சீனா இடையி​லான நேரடி விமான போக்​கு​வரத்து சேவை​கள் மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதன் ஒரு பகு​தி​யாக, ஏர் சீனா நிறு​வனம், பெய்​ஜிங் - டெல்லி இடையி​லான தனது விமான சேவையை செவ்​வாய்க்​கிழமை தொடங்​கி​யுது.

கடந்த 2020-ம் ஆண்டு நில​விய கல்​வான் பள்​ளத்​தாக்கு மோதல் மற்​றும் கரோனா பரவல் காரண​மாக இரு நாடு​களுக்​கும் இடையே​ நேரடி விமான சேவை நிறுத்​தப்​பட்​டிருந்​தது. இந்த நிலை​யில், தற்​போது படிப்​படி​யாக விமான சேவை இயல்பு நிலைக்​குத் திரும்பி வரு​கிறது.

இதுகுறித்து சீனா​வின் ‘குளோபல் டைம்​ஸ்' இதழ் வெளி​யிட்​டுள்ள செய்​தி: பெய்​ஜிங் மற்​றும் டெல்லி இடையி​லான நேரடி விமான சேவையை செவ்​வாய், வெள்ளி, ஞாயிற்​றுக்​கிழமை​ என வாரத்​திற்கு 3 நாட்களில் ஏர் சீனா வழங்க உள்​ளது. இதற்​காக ஏர்​பஸ் 330 ரக விமானங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. பெய்​ஜிங்​கில் இ​ருந்து மதி​யம் 3:15 மணிக்கு புறப்​படும் ஏர் சீனா விமானம், இந்​திய நேரப்​படி இரவு 8:20 மணிக்கு டெல்​லியை வந்​தடை​யும். இதன் ஆரம்​பக்​கட்ட பயணக் கட்​ட​ணம் சுமார் 3,570 யுவான் அதாவது சுமார் ரூ.49,000-ஆக (சு​மார் 523 அமெரிக்க டாலர்) என நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏர் சீனா நிறு​வனத்​தைத் தொடர்ந்​து, பிற விமான நிறு​வனங்​களும் தங்​களது சேவையை விரிவுபடுத்தி வரு​கின்​றன. சீனா ஈஸ்​டர்ன் ஏர்​லைன்ஸ் கடந்த ஏப்​ரல் 18-ம் தேதி முதல் குன்​மிங் - கொல்​கத்தா இடையி​லான சேவையைத் தொடங்​கியது. முன்​ன​தாக, 2025 நவம்​பரில் ஷாங்​காய் - டெல்லி சேவையை இந்​நிறு​வனம் மீண்​டும் தொடங்​கியது. இந்​திய நிறு​வன​மான இண்​டிகோ, மார்ச் 30-ம் தேதி முதல் கொல்​கத்தா - ஷாங்​காய் தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்​கி​யுள்​ள​தாக குளோபல் டைம்ஸ் தெரி​வித்​துள்​ளது.

இரு நாடு​களுக்​கும் இடையி​லான விமான சேவை​யில் ஏற்​பட்​டுள்ள இந்த முன்​னேற்​றம் குறித்து சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யீ கூறுகை​யில், "இந்​திய - சீன உறவு சரி​யான பாதை​யில் பயணிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. வேறு​பாடு​களைக் காட்​டிலும் இரு நாடு​களுக்​கும் இடையே பொது​வான நலன்​களே அதி​கம்.

உலகளா​விய சூழலில் சவால்​கள் நிறைந்​திருக்​கும் நிலை​யில், இந்​தி​யா​வும் சீனா​வும் ஒரு​வரை ஒரு​வர் அச்​சுறுத்​தலாகப்பார்க்​காமல், வளர்ச்​சிக்​கான வாய்ப்​பு​களாகக் கரு​திச் செயல்பட வேண்​டும். இரு நாட்​டுத் தலை​வர்​களின் வழி​காட்​டு​தலின்​படி, கூட்​டாளி​களாகப்​ பயணிக்​கச்​ சீனா தயா​ராக உள்​ளது" என்​றார்​.

இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in