“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” - பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி

“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” - பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி

Published on

மோகா (பஞ்சாப்): அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள கில்லி சஹலான் பகுதியில் நடைபெற்ற மாற்றத்துக்கான பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அமித் ஷா, ‘‘பஞ்சாபில் பாஜக ஒரு துணை சக்தியாக, சின்ன தம்பியாக (கூட்டணியின் சிறிய கட்சியாக) செயல்பட்டக் காலம் முடிந்துவிட்டது.

இன்றிலிருந்து பாஜக பஞ்சாபில் தனக்கென ஒரு சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரச்சாரத்தை தொடங்குகிறது. நீங்கள் (மக்கள்) காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை சோதித்துப் பார்த்துவிட்டீர்கள். இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளியுங்கள். போதைப் பொருள் மற்றும் கடன் சுமையில் இருந்து பஞ்சாபை மீட்கும் வகையில் இரட்டை இன்ஜின் அரசு செயல்படும்’’ என உறுதியளித்தார்.

பஞ்சாபில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக, சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்தது. எனினும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் காரணமாக 2020ல் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. இதையடுத்து, 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 73 தொகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிட்டது.

இந்த தேர்தலில், 6.60% வாக்குகளைப் பெற்ற பாஜக, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் 19% வாக்குகளைப் பெற்றது. இதன் காரணமாக, 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது.

பஞ்சாபின் இந்து மற்றும் சீக்கிய வாக்காளர்களின் ஆதரவை திரட்டும் விதமாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என அமித் ஷா உறுதி அளித்தார். ‘‘நமது சீக்கிய குருமார்கள் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், இத்தகைய மதமாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கருதுகின்றன. 2027 தேர்தலில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அளியுங்கள். நாங்கள் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்’’ என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஏடிஎம் ஆக பஞ்சாப் அரசாங்கத்தை, முதல்வர் பகவந்த் மான் மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அமித் ஷா, ‘‘நாட்டில் நடைபெறும் ஹெராயின் கடத்தலில் 45% பஞ்சாப் மாநிலத்துடன் தொடர்புடையது. பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை நாங்கள் வேரறுப்போம்.

நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 ரத்து விஷயத்திலும் எப்படி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தோமோ அதைப்போல போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதிலும் உறுதியாக செயல்படுவோம்’’ என்று உறுதி அளித்தார்.

“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” - பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி
“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” - பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in