

கன்னையா குமார்
குவாஹாட்டி: “திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஜகவில் இணைந்துவிட்டனர். மிகப்பெரிய ஊடுருவல்காரர் குஜராத்திலிருந்து வந்துள்ளார். ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் சேர்த்து அவரையும் வெளியேற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமார் பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. அசாமில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், ஏப்ரல் 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒரு காணொலி தற்போது வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில், போங்கைகான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமாரின் பேச்சு சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.
அந்தக் காணொலியில், “திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஜகவில் இணைந்துவிட்டனர். இந்தத் திருடர்களின் தலைவன், ஜெய் ஷாவின் தந்தையாவார். ஊடுருவல் ஒரு பிரச்சனை என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கூறினார். அதற்கு நான், இங்கே மிகப்பெரிய ஊடுருவல்காரர் குஜராத்திலிருந்து வந்துள்ளார். ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் சேர்த்து அவரையும் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்' என்று பதிலளித்தேன்..." என்று கன்னையா குமார் கூறியதற்கு பாஜக இப்போது கடும் எதிர்வினையாற்றி வருகிறது.
இதற்கிடையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “இன்று முதல் முறையாக, நமது மக்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்களிக்க வெளியே வந்துள்ளனர். பல வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு 95 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது சாதாரணமானதல்ல. அசாம் மொழி மற்றும் சாதியைக் கடந்து உயர்ந்துள்ளது. சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மக்கள்தொகை ஆக்கிரமிப்பிலிருந்து நமது நிலம், நமது அடையாளம் மற்றும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே தெளிவான உறுதியுடன் நமது மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.