

சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை மத்திய அரசு தாக்கல் செய்யும் பல்வேறு மசோதாக்கள் குறித்து இந்திய ஊடகங்களும், இந்தியாவின் சமூக - பொருளாதார - அரசியல் நகர்வுகளை அலசும் அயல்நாட்டு ஊடகங்களும் வரிந்து எழுதிய ஆதரவு, எதிர்ப்புக் கட்டுரைகள் எண்ணிலடங்காதவை எனலாம்.
அந்த வரிசையில் கடைசியாகச் சேர்ந்து கொண்டு, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புக்கு இடையேயும் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill எனப்படும் ‘வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா’.
இந்த மசோதா “ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கின்” உச்சம் என்று அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்க்கின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடுமையான கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சட்ட மசோதவை உடனடியாகத் திரும்பப் பெறும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் பினராயி. எதிர்ப்புகள் வலுக்க, நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த இந்த மசோதா மீதான விவாதம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
FCRA எதிர்ப்பு ஏன்?
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதா, 2026-க்கு ஏன் இத்தகைய எதிர்ப்பு என்று பார்ப்போம்.
இந்தியாவில், இப்போதைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 16,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.22,000 கோடி வெளிநாட்டுப் பங்களிப்பாக நிதி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இவ்வாறாக இருக்க, FCRA உரிமம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்தானாலோ, அது புதுப்பிக்கப் படவில்லை என்றாலோ, அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனமே சரண்டர் செய்தாலோ அதன் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துகள், வெளிநாட்டு நிதி ஆகியவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம், நிர்வகிக்கப் படலாம் அல்லது தேவைப்படின் அரசு அதை விற்பனை செய்யலாம், என்கிறது வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதா, 2026.
இதன்மூலம், கிறிஸ்துவ சிறுபான்மை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்கின்றனர் எதிர்ப்பாளர்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கப் பகிர்வில், “ஒன்றிய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.
ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச் சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். இதைக் கைவிட்டு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். பிரச்சாரக் களங்களிலும் தற்போது இது குறித்துப் பேசி வருகிறார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த விளக்கத்தில், “இந்தச் சட்டம் சட்டபூர்வமான அமைப்புகளை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக வெளிநாட்டு நிதிகளின் சட்டவிரோதமான அல்லது "தேசவிரோத" பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டுப் பங்களிப்புகள் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “FCRA சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இது கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. ஆனால், அப்படியான பொய்ப் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கொண்டுவந்த சட்டம்:
1976-ல் இந்திரா காந்தி ஆட்சியின் கீழ் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோதுதான் இந்தச் சட்டம் முதன்முதலில் அமலுக்கு வந்தது. இந்தியாவில் உள்ள என்ஜிஓக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அதை ஒழுங்கப்படுத்த இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அப்போது சொல்லப்பட்டது. 2010-ல் பெரிய திருத்தத்தை காங்கிரஸ் கொண்டுவந்தது. அந்தத் திருத்தம்தான், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் வளையத்துக்குள் ஊடக அமைப்புகளையும் கொண்டு வந்தது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறையையும் கொண்டு வந்தது.
அதன்பிறகு மூன்று முறை பாஜக இந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தது. 2020-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டுப் பங்களிப்புகள் டெல்லியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட எஸ்பிஐ கணக்குகள் மூலமாக மட்டும்தான் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தது. அதேபோல் என்ஜிஓக்களின் நிர்வாகச் செலவினங்களுக்கான அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகக் குறைத்தது.
கரோனா பெருந்தொற்றுக் கால திணறல்களுக்கு மத்தியில் அமலுக்கு வந்த இந்தத் திருத்தங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், “வெளிநாட்டு நிதி பங்களிப்பால் தேசிய அரசியலில் தாக்கம் ஏற்படுமென்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவே உள்ளது. அதனால், வெளிநாட்டு நிதி பங்களிப்பின் அளவு என்பது தவிர்க்க முடியாத நிலையில் குறைந்தபட்சமாகவே இருக்கவேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதிதாக என்ன அச்சுறுத்தல்?
இந்நிலையில், 2026 சட்டத் திருத்தத்தில் 3ஏ என்ற புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டால், அல்லது அந்த நிறுவனமே அதனை சரண் செய்தால், உரிமம் காலாவதியானால் அதன் சொத்துகள், உடைமைகள் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட தற்காலிகக் குழுவின் பிடிமானத்திற்குள் செல்லும். அவ்வாறு சென்றபின்னர், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் சொத்துகள் அரசு குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் நிரந்தரமாக சென்றுவிடும். இந்த புதிய சட்டத்தின்படி அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசு பயன்படுத்திக் கொள்ளவோ, விற்கவோ, மடைமாற்றிக் கொடுக்கவா உரிமை பெறுகிறது.
அதுமட்டுமல்லாது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொண்டு நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. மத்திய அரசு உரிமத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டால், அரசு அமைத்த குழுவின் வசம் அதன் சொத்துக்கள் வந்துவிடும்.
இந்நிலையில்தான் இந்தச் சட்டம் கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிரானது என்று அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்தச் சட்டம் வெளிப்படைத் தன்மையற்றதாக இருப்பதாகவும் இது சிறுபான்மை சமூகங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களையே குறிவைப்பதாகவும் கண்டனக் குரல்கள் வலுக்கின்றன.
இது குறித்து திமுக எம்.பி. வில்சன் கூறுகையில், “இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் உரிமம் இல்லை எனக் கூறி, அதனை அரசே எடுத்துக் கொள்ள முடியும்.
பெரும்பாலான தொண்டு நிறுவனங்களை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகிறார்கள். அதனால் எப்போது வேண்டுமாலும் அவர்கள் உரிமத்தை ரத்து செய்ய முடியும் என்கிற முறையில் கொடூரமான சட்டத்தை கொண்டுவரப் பார்க்கிறார்கள்.
75 ஆண்டுகளாக கல்வியை பரப்பியதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்களால் ஏழைகள், பட்டியல், பழங்குடியினர் பயன்பெறுகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு வக்பு சட்டம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளை அடித்து பிடுங்கினார்கள். அதே போல இந்த சட்டத்தை நிறைவேற்றினால் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கும்.
5 மாநில தேர்தல் காரணமாகவே நாடாளுமன்றத்தில் இதைப் பற்றிய விவாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமாலும் அவர்கள் இதனை நிறைவேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு” என்று கூறியிருக்கிறார்.
5 மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசு இந்தச் சட்ட மசோதாவை எப்படி அணுகுகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.