Published : 30 May 2023 04:19 PM
Last Updated : 30 May 2023 04:19 PM

மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசினால் தடுக்க மாட்டேன்: ஹரித்வார் எஸ்.பி. பேச்சால் சர்ச்சை

ஹரித்வார்: மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து தனக்கு எவ்வித உத்தரவும் வராததால், அவர்கள் சுதந்திரமாக பதக்கங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஹரித்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், "மல்யுத்த வீரர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். அவர்கள் புனித கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்க விரும்பினால், அவர்களை நான் தடுக்கப் போவதில்லை. ஏனெனில், இதுவரை எனது உயரதிகாரிகளிடமிருந்து எனக்கு அப்படி எந்த ஒரு உத்தரவும் வரவில்லை.
மக்கள் தங்கம், வெள்ளி, அஸ்தி என எதை வேண்டுமானாலும் கங்கையில் போடுவதுண்டு. கங்கா தசரா தினத்தில் 15 லட்சம் மக்கள் கங்கையில் புனித நீராடுவார்கள். அதனால் நாங்கள் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளையும் அழைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் கூட்டறிக்கை: முன்னதாக மல்யுத்த வீராங்கனைகள் சமூக ஊடகங்களில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 28-ஆம் தேதி எங்களுக்கு என்ன நடந்ததென்று நீங்களே பார்த்தீர்கள். நாங்கள் ஜந்தர் மந்தரில் அறவழியில்தான் போராடினோம். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதி கோரியதால் நாங்கள் தவறிழைத்துவிட்டோமா? எங்களைக் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளனர்.

முன்னதாக, நாங்கள் எங்களின் பதக்கங்களை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். குடியரசுத் தலைவரிடம் கொடுக்கலாமா என யோசித்தோம். அவர் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில்தான் இருந்தார். ஆனால் அவர் எங்கள் வேதனையைக் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர் எங்களை (பெண் பிள்ளைகளை) மகள்கள் என்றழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா என யோசித்தோம். ஆனால், அவரோ நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறைகூட எங்களைப் பற்றி விசாரித்ததில்லை. இதை எல்லாவற்றையும்விட நாங்கள் யாருக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோமோ அவருக்கே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனால், நாங்கள் காவல் துறையைக் கண்டித்தும், நீதி கிடைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் கங்கை நதியில் பதக்கங்களை வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஏப்ரல் 23 தொடங்கிய போராட்டம்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் 23 ஆம் தேதி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

இதுகுறித்து டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “சட்டம் - ஒழுங்கை மீறியதற்காக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதன் தொடர்ச்சியாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x