Published : 30 May 2023 01:51 PM
Last Updated : 30 May 2023 01:51 PM

மணிப்பூரில் அமைதி நிலவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மோதல் நிகழ்ந்து வருவதால் அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று (மே 30) சந்தித்து இது தொடர்பாக 4 பக்க மனுவை அளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், பக்தசரண் தாஸ், ஒக்ராம் இபோபி சிங், மேகசந்திர சிங், கைகங்காம், தோக்கோம் லோகேஷ்வர் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், "மணிப்பூரில் கடந்த 3-ம் தேதியில் இருந்து மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் பழங்குடி சமூகத்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 2 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாத காலமாக மணிப்பூரில் நிலைமை பதற்றமாகவே இருக்கிறது. இருந்தும் மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனத்தை செலுத்தவில்லை. மே 10-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், பாஜக தலைவர்களின் கவனம் அதில்தான் இருந்தது. அதன்பிறகாவது உடனடியாக செயல்பட்டிருக்கலாம். ஆனால், நேற்றுதான் (மே 29) உள்துறை அமைச்சர் மணிப்பூர் வந்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாகாலாந்தில் துரதிருஷ்டவசமாக இரண்டு மிகப் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எட்டப்பட்ட தீர்வு என்பது நாகாலாந்துக்கு மட்டுமே என்பதாக இருந்தது. ஆனால், அண்டை மாநிலமான மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு அப்போது முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது, மணிப்பூர் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், மணிப்பூரிலும் கலவரம் ஏற்பட்டது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் மீண்டும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. மணிப்பூரில் நிலவும் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கிலேயே குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். அவரும், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x