Published : 27 May 2023 05:10 PM
Last Updated : 27 May 2023 05:10 PM

பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்: பாஜக

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் சில மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பாஜக விமர்சித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் ஒருநாள் கூட்டம் புதுடெல்லி, பிரகதி மைதான அரங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எனினும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவ்வாறு 8 முதல்வர்கள் பங்கேற்காதது பொறுப்பற்ற செயல் என்று பாஜக கண்டித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், 2047-க்கான தொலைநோக்கு திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, புகார்களை குறைப்பதற்கான வாய்ப்புகள், பெண் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

100 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் 8 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்காததன் மூலம், அவர்கள் தங்கள் மாநிலத்தின் கருத்தை பதிவு செய்வதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளனர். இது துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்றது, மக்களுக்கு எதிரானது.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க நீங்கள் இன்னும் எந்த அளவுக்குச் செல்வீர்கள்? நரேந்திர மோடியை எதிர்க்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால், உங்கள் மாநில மக்களுக்கு ஏன் கெடுதல் செய்கிறீர்கள்? இது முழுக்க முழுக்க பொறுப்பற்ற செயல். தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களின் நலன்களுக்கு எதிரான செயல்" என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x