Published : 22 May 2023 07:09 AM
Last Updated : 22 May 2023 07:09 AM

முஸ்லிம் இளைஞருடனான மகளின் திருமணம் நிறுத்தம்: உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவர் யஷ்பால் தகவல்

கோப்புப்படம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பவுரி கடுவால் நகரைச் சேர்ந்தவர் பாஜக மூத்த தலைவர் யஷ்பால் பேனம். முன்னாள் எம்எல்ஏவான இவர் பவுரி கடுவால் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் படித்தபோது யஷ்பால் பேனமின் மகள் மோனிகாவும், உத்தர பிரதேசத்தின் அமேதி பகுதியை சேர்ந்த முகமது மோனிஸும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இவர்களின் திருமணம் வரும் 28-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த திருமணத்துக்கு உத்தராகண்ட் மாநில இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்தன. இதன் காரணமாக பாஜக மூத்த தலைவர் யஷ்பால் பேனம் தனது மகளின் திருமணத்தை நிறுத்தி உள்ளார். இதுகுறித்து யஷ்பால் பேனம் கூறியதாவது:

எனது மகளின் விருப்பத்துக்கு மதிப்பளித்து திருமணத்தை நடத்த ஏற்பாடுகளை செய்தேன். இந்து பாரம்பரிய முறையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு மே 26 முதல் 28-ம் தேதி வரை திருமன நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அருகில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரு மதங்களின் வழக்கத்தின்படி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. திருமணம் என்பது அனைவரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி. இப்போதைய சூழ்நிலையில் திருமணத்தை நடத்த முடியாது. நான் மக்கள் பிரதிநிதி. போலீஸ் பாதுகாப்பில் திருமணத்தை நடத்த விரும்பவில்லை.

மகளின் விருப்பம் மட்டுமன்றி மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க விரும்புகிறேன். எனவே இரு குடும்பத்தினரும் இணைந்து திருமண நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டோம். எனது குடும்பத்தினர், நலம் விரும்பிகள், மணமகன் வீட்டார் ஆகியோருடன் கலந்து பேசி எனது மகளின் திருமணம் குறித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு யஷ்பால் பேனம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x