Last Updated : 26 Oct, 2017 09:34 AM

 

Published : 26 Oct 2017 09:34 AM
Last Updated : 26 Oct 2017 09:34 AM

இந்துத்துவ அமைப்பினர் எதிர்க்கும் திப்பு சுல்தானை பாராட்டிய ராம்நாத்: சட்டப்பேரவை வைர விழாவில் அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்

கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக எதிர்க்கும் திப்பு சுல்தானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டிப் பேசிய சம்பவம் அம்மாநில காங்கிரஸார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மைசூரு புலி’ என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை (நவ.10) கர்நாடக அரசு ஆண்டுதோறும் ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர், “திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது. ஆயிரக்கணக்கான இந்துக்களையும், கோயில்களையும் அழித்த திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா அழைப்பிதழில் எங்கள் பெயர் இடம்பெறக் கூடாது” என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டப்பேரவை (விதான சவுதா) கட்டிடத்தின் வைர விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்பு அவையில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அப்போது அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா, முதல்வர் சித்தராமையா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பேசும்போது, “கர்நாடகா வல்லமை மிக்க மாவீரர்களின் பூமி. பசவேஸ்வரா, கிருஷ்ணதேவராயர், கிட்டூர் ராணி சென்னம்மா போன்றோர் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உத்வேகமாக உள்ளனர். மைசூருவை ஆண்ட திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்தார். திப்பு சுல்தான் மைசூரு ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து போரில் சிறப்பாக பயன்படுத்தினார். பின்னாளில் இந்த தொழில்நுட்பத்தையே ஐரோப்பியர்கள் மேம்படுத்தி பயன்படுத்தினர்” என்றார்.

குடியரசுத் தலைவரின் பேச்சு காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களும் மேசையைத் தட்டித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதே வேளையில் குடியரசுத் தலைவரின் பேச்சுக்கு பிறகு எதுவும் பேசாமல் ஆளுநர் வாஜூபாய் வாலா, எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் அவையில் இருந்து அமைதியாக எழுந்து சென்றனர்.

முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் மிகச் சிறந்த உரையை ஆற்றியுள்ளார். சிறந்த அரசியல் தலைவருக்கு (ராம்நாத் கோவிந்த்) என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டார். திப்பு ஜெயந்தியை தேச துரோக விழா என பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவரின் இந்தப் பேச்சு தேசிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய தீக்ஷா பூமிக்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது” என குறிப்பிட்டார். இந்தப் பேச்சு பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x