Published : 21 May 2023 12:08 AM
Last Updated : 21 May 2023 12:08 AM

5 வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றம்? - மாநிலத்தின் நிதிநிலை குறித்து விளக்கம் கொடுத்த கர்நாடக முதல்வர்

பெங்களூரு: தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசியுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா.

கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், கர்நாடக துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்றார். இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த ஐந்து வாக்குறுதிகள் இரண்டு மணிநேரத்தில் சட்டமாக்கப்படும் என்றார்.

அதன்படி, முதல் அமைச்சரவைக் கூட்டம் பெங்களூருவில் விதான் சவுதாவில் நடத்தப்பட்டது. இதன்பின் முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களைச் சந்தித்தார். 'புதிய அமைச்சரவை அதன் தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது என்றும், இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி செலவாகும் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். அதில், ''சொல்வதைக் கடைப்பிடிக்கும் அரசு இது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 5 வாக்குறுதிகளுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

200 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிருக்கு மாதம் ரூ.2000, 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை செயல்படுத்த விரிவான விளக்கங்கள் தயாரிக்கப்படும். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதேபோல், இந்திரா கேன்டீன்கள் குறித்த தகவல்களும் பெறப்பட்டு, இவை மீண்டும் திறக்கப்படும். 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை 3 நாள் கூட்டத்தொடர் கூடி, ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த காலத்தில் எனது தலைமையிலான அரசாங்கம் வழங்கிய 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொன்ன சொல்லைக் காப்பாற்றினோம். எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், இந்திரா கேட்டீன், சாலமன்னா, வித்யாசிறி, ஷூ பாக்யா, பசு பாக்யா உள்ளிட்ட 30 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

நாங்கள் இப்போது அளித்துள்ள ஐந்து வாக்குறுதிகள் மாநிலத்தை கடனில் தள்ளும், நிதி திவாலாகிவிடும், மாநிலத்தை கடனாளியாக்கும் என்று சிலர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த உத்தரவாதங்களை நிறைவேற்ற 50 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று மன் கி பாத்தில் பிரதமர் கூறினார்.

கர்நாடக மாநில பட்ஜெட்டின் மொத்த அளவு ரூ.3.10 லட்சம் கோடி. ஒவ்வொரு ஆண்டும் அதன் அளவு 10 சதவீதம் அதிகரிக்கிறது. வரி வசூல் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்டி தொகையை மாநிலத்துக்கு வழங்குவது மத்திய அரசின் முடிவு. பெட்ரோல் டீசல், கலால் வரி, மோட்டார் வாகன வரி, முத்திரை மற்றும் பதிவு மூலம் மாநிலத்திற்கு முக்கிய வருவாய் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், 15வது நிதி கமிஷன் மூலம், மாநிலத்துக்கு 50 ஆயிரம் கோடி மட்டுமே வரும் என கூறப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடி கர்நாடகாவுக்கு வந்திருக்க வேண்டும். மத்தியிலிருந்து மாநிலத்துக்கு வரும் பங்கை பெறுவதில் முந்தைய அரசு பொறுப்பற்றதாக செயல்பட்டது. கர்நாடகாவிடம் இருந்து 4 லட்சம் கோடி வரி மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் கடன் ரூ.52,11,000 கோடியாக இருந்தது. இப்போது நாட்டின் கடன் 155 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 102 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு எங்கள் ஆட்சிக் காலம் வரை மாநிலத்தின் கடன் 2,42,000 கோடி. இப்போது 2023-24ல் மாநிலத்தின் கடன் ரூ.5,64,000 கோடி. அதாவது பசவராஜ் பொம்மை பதவிக்காலத்தில் 3,22,000 கோடி கடன் பெற்றார். இதுதான் மாநிலத்தின் பொருளாதார நிலை.

2023-24ல் கடனுக்கான வட்டி மற்றும் அசலை செலுத்த 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. வரி வசூல், தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், வட்டியைக் குறைத்தல், கடன் வாங்காமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். எனவே, எனது தலைமையிலான அரசாங்கம் நிதி ரீதியாக திவாலாகிவிடாத வகையில் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றும்.

நிதி ஆயோக் பரிந்துரையின்படி மத்திய அரசு எங்களுக்கு ரூ.5,495 கோடி வழங்க வேண்டும். முந்தைய அரசு அதை பெறவில்லை. எந்த நிதியையும் பெறாமல் முந்தைய அரசு பயனற்ற ஒரு அரசாக இருந்துள்ளது. நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். அவர் மற்றும் பிரதமரால் தான் கர்நாடகா நஷ்டம் அடைந்தது" இவ்வாறாக முதல்வர் சித்தராமையா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x