Published : 20 May 2023 04:42 AM
Last Updated : 20 May 2023 04:42 AM

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது ஏன்?: தற்கொலைக்கு முன்பாக மாணவர் வீடியோவில் வாக்குமூலம்

புதுடெல்லி: காதலித்த கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாணவர், அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக எதற்காக மாணவியை சுட்டுக் கொன்றேன் என்பது குறித்து வீடியோ வாயிலாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உத்தர பிரதேசம் அம்ரோஹாவை சேர்ந்த அனுஜ் சிங்கும் (21) கான்பூரை சேர்ந்த சினேகா சவுராஸியாவும் (21) பி.ஏ. சமூகவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். கடந்த டிசம்பரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அனுஜ் சிங்கிடம் இருந்து சினேகா விலகிச் சென்றார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் மதியம் உணவு அருந்தும் கூடத்தில் அனுஜும் சினேகாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனுஜ் திடீரென துப்பாக்கியை எடுத்து சினேகாவை சுட்டுக் கொலை செய்தார். பின்னர் விடுதி அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக எதற்காக சினேகாவை கொலை செய்தேன் என்பதை வீடியோவாக பதிவு செய்து ஜி-மெயில் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது அக்காவை அவரது கணவரே தீ வைத்து எரித்தார். எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மனைவி வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இரு சம்பவங்களும் எனது மனதை கடுமையாகப் பாதித்தன. அதில் இருந்து மெதுவாக மீண்டு வந்தேன்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். சினேகாவை சந்தித்தேன். அவள் என் வாழ்வை மாற்றினாள். அன்சூ என்ற மாணவர், சினேகாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். அந்த மாணவரை நான் கண்டித்து விரட்டினேன். அப்போது முதல் சினேகா என்னை விரும்ப தொடங்கினாள். தனது காதலை ஏற்றுக் கொள்ள கோரினாள். முதலில் நான் மறுத்தேன். பின்னர் அவளது காதலை ஏற்றுக் கொண்டேன்.

ஒருமுறை நான் வீட்டுக்கு சென்றுவிட்டு பல்கலைக்கழகம் திரும்பிய நேரத்தில் அவள் என்னை ஏமாற்றினாள். பல்கலைக்கழக உணவு விடுதி ஊழியரிடம் நெருங்கிப் பழகினாள். என்னிடம் இருந்து விலகிச் சென்றாள்.

கடந்த புத்தாண்டில் காதலை முறித்துக் கொள்வதாக கூறினாள். அதன்பிறகு என் மீது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தாள். அவள் (சினேகா) என்னை ஏமாற்றினாள். அதற்கு அவள் தண்டிக்கப்பட வேண்டும். அதனால்தான் அவளை சுட்டு கொலை செய்தேன்.

எனக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றால் 2 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வேன். எனது பெற்றோருக்கு நல்ல மகனாக இருக்க முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறேன். இவ்வாறு அனுஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை கண்ணீர்: கொலை செய்யப்பட்ட மாணவி சினேகாவின் தந்தை ராஜ்குமார் கூறும்போது, “பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளார். இத்தனை பாதுகாவலர்கள் இருந்தும் எனது மகளை, அனுஜ் சிங் இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை பற்றி எனது மகள் எதுவுமே கூறியது கிடையாது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மீது வழக்கு தொடருவேன்’’ என்று கண்ணீர்மல்க கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x