Last Updated : 09 May, 2023 07:35 AM

 

Published : 09 May 2023 07:35 AM
Last Updated : 09 May 2023 07:35 AM

பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது - கர்நாடகாவில் நாளை வாக்குப் பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை (மே 10-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல்
பிரச்சாரத்துக்கு நேற்று கடைசி நாள் என்பதால் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நாளை (மே 10-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கத்துக்கு ஒதுக்கீடு), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற‌னர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

பாஜகவின் தீவிர‌ பிரச்சாரம்: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர‌ மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உட்பட நூற்றுக்கணக்கான முக்கிய தலைவர்கள் கடந்த 3 மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த பாஜக நிர்வாகிகளும் கர்நாடகாவில் தொகுதி வாரியாக குவிக்கப்பட்டு, இரவு பகலாக வாக்கு வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் மோடி
கடந்த 7 நாட்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 31 மாவட்டங்களுக்கும் சென்று 18 பொதுக்கூட்டங்களில் பேசினார். பெங்களூரு, மைசூரு, மங்களூரு உட்பட 5 முக்கிய நகரங்களில் வாகன பேரணி மேற்கொண்டார்.

இறுதி நாளான நேற்று எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் அவரது மகன் விஜயேந்திராவை ஆதரித்தும், ஷிகோன் தொகுதியில் பசவராஜ் பொம்மையும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் பெங்களூருவிலும், அண்ணாமலை மங்களூருவிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குல்பர்காவில் தன் மகன் பிரியங்க் கார்கேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் முதல்வர் சித்தராமையா நஞ்சன்கூட்டிலும், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுராவிலும் பொதுக்கூட்டத்தில் பேசினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் காந்தி நகர், சாந்தி நகர், சிவாஜி நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட‌னர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று காலையில் பெங்களூருவில் காபே காஃபி டே ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் கன்னிங்ஹாம் சாலையில் மாநகர பேருந்தில் ஏறிய அவர் லிங்கராஜபுரம் வரை சென்று பயணிகளிடம் சகஜமாக உரையாடி வாக்கு சேகரித்தார். அப்போது ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்' என வாக்குறுதி அளித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெங்களூருவில் உள்ள விஜய நகர், கோவிந்தராஜ நகர் ஆகிய தொகுதிகளில் சாலை பேரணி மேற்கொண்டார். சாலைகளில் குவிந்திருந்த பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் மலர்களை அள்ளி வீசினார்.

கடந்த 7 நாட்களில் பிரியங்கா 15-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களிலும், 6 சாலை பேரணிகளிலும், 2 கலந்தாலோசனை கூட்டங்களிலும் பங்கேற்றார். ராகுல் காந்தி கடந்த 15 நாட்களில் மாநிலம் முழுவதும் பயணித்து 30க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டங்கள், 6 பேரணிகள், 5 கலந்தாலோசனை கூட்டங்களில் பேசினார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி ஒரே ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.

திறந்த வாகனத்தில் பிரச்சாரம்: ராம்நகரில் போட்டியிடும் தன் பேரன் நிகிலை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார். 91 வயதில் அவர் சுமார் 1 மணி நேரம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்து மஜத தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். முன்னாள் முதல்வர் குமாரசாமி பசவனகுடி, மண்டியா, ராம்நகர் ஆகிய தொகுதிகளிலும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தும்கூர், ஹாசன் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினர். பிரச்சாரம் முடிவடைந்ததால் கருத்துக் கணிப்புகள் நடத்தி வெளியிட தேர்தல் ஆணைய‌ம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் இன்று வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதித்துள்ளது. பிரச்சாரம் நிறைவடைந்துள்ளதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள‌து. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதியோர், மாற்றுத் திறனாளிகள் 94% பேர் வாக்குப்பதிவு: கர்நாடக தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் முதன் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் 99,529 பேர் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 29ம் தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது. அதில் 94,326 பேர் வாக்களித்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்குச்சாவடியில் நேரடியாகவும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x