Published : 08 May 2023 08:15 PM
Last Updated : 08 May 2023 08:15 PM

ஓய்ந்தது கர்நாடக தேர்தல் பிரச்சாரம் - கடைசி நாள் களத்தின் ஹைலைட்ஸ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.

கவனம் ஈர்த்த ராகுல்: இன்று காலை பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அங்கு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். பின்னர், அவர்களோடு பேருந்திலும் பயணித்தார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்தும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துக்கூறினார். இந்த பயணத்தின்போது கல்லூரி மாணவிகள் ராகுல் காந்தியோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், செல்பி எடுத்துக்கொள்ளவும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்களோடு, ராகுல் காந்தி புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, சிலருக்கு அவர்களின் மொபைல்போன்களை வாங்கி அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சாலை மார்க்கமாக வாகனப் பேரணி போன்ற முறைகள் மூலமும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன கார்கே கலபுர்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்குகளைக் கோரினார். குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம், பெண்களுக்கான இலவச பேருந்து சேவை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம்தோறும் 10 கிலோ அரிசி இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டார்.

பிரியங்கா பிரச்சாரம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விஜயநகரா பகுதியில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரித்தார். ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும், மக்கள் பெருமைப்படக்கூடிய அரசை அமைக்கவும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் ஊழலையும், கொள்ளையையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் பயணித்த சாலைகளில் இருபுறமும் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என கூற விரும்பவில்லை. மக்கள் எங்களுக்கு அளித்துள்ள ஆதரவைப் பார்க்கிறோம். நிச்சயம் ஊழல் அரசுக்கு முடிவு கட்டப்படும்" என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான டி.கே. சிவகுமார், சித்தராமைய்யா ஆகியோர் தனித்தனியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜக பிரச்சாரம் எப்படி? - தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஜெ.பி. நட்டா, அமித் ஷா, நரேந்திர மோடி போன்றவர்களின் பிரச்சாரம் இல்லை. அதேநேரத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஷிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளரான தனது மகன் பிஎஸ் விஜயேந்திராவுடன் எடியூரப்பாக இணைந்து வாக்குகளைக் கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, லிங்காயத் மக்கள் அனைவரும் பாஜகவோடு இருக்கிறார்கள்; அவர்களின் வாக்கு பாஜகவுக்கே கிடைக்கும் என தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் இரட்டை இஞ்சின் ஆட்சி தொடரும் என்பதையும், அது கர்நாடகாவின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பதையும் மக்களிடம் அழுத்தமாக பதியவைப்பதற்கு ஏற்ப பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்தது. மேலும், கர்நாடகாவில் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்துவோம் என காங்கிரஸ் கூறி இருப்பதை இந்துக்களுக்கு எதிரானதாக பாஜக பிரச்சாரம் செய்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதம் உயர்த்துவோம் என்றால் அந்த 2 சதவீதத்தை யாரிடம் இருந்து எடுத்துக்கொடுப்பீர்கள் என்பது குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்ற சோனியா காந்தியின் கருத்துக்கு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடாகவின் இறையாண்மை குறித்து கருத்து காங்கிரசின் மூளை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது. பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதற்கு இந்துக்கள் கடும் பதிலடி கொடுப்பார்கள். வெடிகுண்டுகள் இல்லாத புதிய வகை பயங்கரவாதம் ஒன்று உருவெடுத்திருப்பதையே கேரளா ஸ்டோரி அம்பலப்படுத்தி இருக்கிறது" என தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, சென்னபட்னாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கன்னட மக்களுக்கானதாக கர்நாடகம் விளங்க வேண்டும் என்றால் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற வேண்டும் என அவர் பிராந்திய உணர்வை தூண்டும் விதமாகப் பேசினார். சாதி, மதம், மொழி, பிராந்தியம் உள்ளிட்ட உணர்வுகளைத் தூண்டும் விதமாக பல்வேறு கட்சிகளும் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x