Published : 05 May 2023 03:32 PM
Last Updated : 05 May 2023 03:32 PM

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அளிப்பவை ‘இலவசங்கள்’ அல்ல - அமித் ஷா சிறப்புப் பேட்டி

புதுடெல்லி: அனைத்து மொழிகளும் வளர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அளிப்பவை ‘இலவசங்கள்’ அல்ல என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியின் விவரம்:

பாஜக பெரும்பாலும் இந்திக்கு ஆதரவான கட்சி என்றும், அந்த நோக்கிலேயே அது தனது திட்டத்தை முன்னிறுத்துகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

“பாஜக மீது அவ்வப்போது கூறப்படும் குற்றச்சாட்டு இது. உண்மையில் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாஜக பணியாற்றுகிறது. பெரும்பாலான மத்திய பணிக்கான தேர்வுகள் தற்போது உள்ளூர்மொழிகளிலும் எழுத முடியும். மாநில மொழிகளில் கல்வி பயின்றவர்களுக்கு இந்தத் தேர்வுகள் கடினமாக இருப்பதாகக் கூறப்பட்டது. நாங்கள் அதனை தற்போது மாற்றி இருக்கிறோம். நீட் தேர்வும் இந்தியாவின் பல மொழிகளில் எழுத முடியும். எனவே, நாங்கள் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க பணியாற்றுகிறோம். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளையும்கூட மாநில மொழிகளில் நாங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.”

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. இந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டியது பாஜகவுக்கு எவ்வளவு முக்கியம்?

“இந்தத் தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியம். முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம். அந்த அளவுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கர்நாடகாவின் வளர்ச்சிக்காக பணியாற்றி உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4.10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 43 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் 4 கோடி மக்கள் பலனடைந்து வருகின்றனர். பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் 54 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தெலங்கானாவிலும் நாங்கள் வலுவாக இருக்கிறோம். தெற்கே பாஜக வளர்ந்து வருகிறது. தெலங்கானாவில் உள்ள ஊழல் அரசை பாஜக வீழ்த்தும் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது.”

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜக வளர எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

“பாஜகவின் முயற்சி காரணமாக ஒவ்வொரு பூத் அளவிலும் கட்சிக்குத் தொண்டர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளாவிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். கர்நாடகா, தெலங்கானாவைப் போல் இந்த மாநிலங்களில் பாஜக முன்னேறவில்லை. ஆனால், முயற்சிகள் தொடர்கின்றன.”

கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜகவை கொண்டு செல்வதற்கான முயற்சிகள்...

“ஒவ்வொரு இந்தியரிடமும் பாஜகவை கொண்டு செல்ல நாங்கள் முயல்கிறோம். கேரளாவில் கிறிஸ்தவர்களிடம் பாஜகவை கொண்டு செல்வதும் அதன் ஓர் அங்கம்தான்.”

ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மண் சவதி ஆகியோரின் விலகலைப் பார்க்கும்போது, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியது ஒரு தவறான நடவடிக்கையா?

“எடியூரப்பா பதவி விலகியது அவராக எடுத்த முடிவு. வேறொருவர் முதல்வராக அவர் வழி ஏற்படுத்தினார். எங்கள் கட்சியில் வயது வரம்பு உள்ளது. அதன்படி செயல்பட கட்சி நினைத்தால் அது நடக்கும். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு 8 மாதங்களுக்குப் பிறகு எடியூரப்பா பதவி விலகினார். இது இயற்கையான தலைமுறை மாற்றத்தின் ஒரு அங்கம். ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மண் சவதி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு சரியான காரணங்கள் இருக்கின்றன. முதல்வர் பசவராஜ் பொம்மையின் கீழ் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என ஷெட்டர் கூறிவிட்டார். எனவே, ஏன் அவரை வெறும் எம்எல்ஏவாக வைத்திருக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம்.

லக்‌ஷ்மண் சவதியைப் பொறுத்தவரை அவர் தற்போது எம்எல்சியாக இருக்கிறார். 2028 வரை அந்த பதவி அவருக்கு இருக்கிறது. எனவே, அவருக்குப் பதில் வேறொருவரை ஏன் நிறுத்தக் கூடாது என கருதினோம். அவர்களை நாங்கள் கிளர்ச்சியாளர்கள் என கருதவில்லை. பாஜகவில் இருந்தபோது மிகப் பெரிய வெற்றி பெற்ற ஜெகதீஷ் ஷெட்டர், இம்முறை மிக மோசமான தோல்வியை தழுவுவார். ஹூப்லி மக்கள் தாமரைக்காகவே வாக்களிப்பார்கள்; தனிநபர்களுக்காக அல்ல.”

இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெற்றுள்ளதே?

“இலவச கலாச்சாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் 3 கோடி மக்களுக்கு வீடுகளை வழங்கி இருக்கிறோம். 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் குழாய் மூலம் குடிநீர் வழங்குகிறோம். எரிவாயு சிலிண்டர் வழங்குகிறோம். ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்குகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் உணவு தானியங்கள் வழங்குகிறோம். இவை எதுவும் இலவசங்கள் அல்ல. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அளிக்கப்படுபவை. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என கூறுவதைத்தான் இலவச கலாச்சாரம் என்கிறோம்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x