Published : 22 Apr 2023 03:46 AM
Last Updated : 22 Apr 2023 03:46 AM

சூடான் உள்நாட்டு கலவரத்தில் இருந்து இந்தியர்களை மீட்க அவசர திட்டம்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அவசர திட்டங்களை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ தலைமை தளபதி அப்துல் பதா அல்-புக்ரான் அதிபராக பதவி வகிக்கிறார். ஒரு காலத்தில் சூடானில் தீவிரவாத குழுவாக செயல்பட்ட ஜன்ஜாவித் அமைப்பு கடந்த 2000-ல் ராணுவத்துடன் அமைதி ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஜன்ஜாவித் தீவிரவாத குழு, ஆர்எஸ்எஃப் என்ற பெயரில் துணை ராணுவ படையாக மாற்றப்பட்டது. இதன் தலைவர் முகமதுஹம்தான் டகாலோ, துணை அதிபராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், அதிபருக்கும், துணை அதிபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது. ராணுவமும், ஆர்எஸ்எஃப் படையும் கடந்த14-ம் தேதி முதல் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.

400 பேர் உயிரிழப்பு: இதன் காரணமாக, சூடானில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சூடானில் பல்வேறு பகுதிகளில் சுமார் 3,000 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீட்பு நடவடிக்கைக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளன.

மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸை சந்தித்து சூடான் நிலவரம் குறித்து ஆலோசித்தார்.

இந்த சூழலில் சூடான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

சூடான் உள்நாட்டு போரில் ஓர் இந்தியர் உயிரிழந்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். ‘‘சூடானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அருகே உள்ள நாடுகளிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கமான தொடர்பில் இருக்க வேண்டும். சூடானில்சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்க அவசர திட்டங்களை தயார் செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் உத்தரவிட்டார்.

அமெரிக்க தூதரகம் மூடல்: சூடான் தலைநகர் கார்டூமில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. சூடானில்சுமார் 19,000 அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கராணுவ தலைமையகமான பென்டகன் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x