Last Updated : 18 Apr, 2023 06:01 AM

 

Published : 18 Apr 2023 06:01 AM
Last Updated : 18 Apr 2023 06:01 AM

அத்தீக் கொலை பின்னணியில் பெரும் புள்ளியா? - குற்றவாளிகள் பயன்படுத்திய துருக்கி துப்பாக்கிகளின் விலை ரூ.12 லட்சம்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் குற்றப் பின்னணி அரசியல்வாதியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டதாக அருண் மவுரியா (18), லவ்லேஷ் திவாரி (22), சன்னிசிங் (23) ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் லவ்லேஷ் திவாரி, தன் முகநூலில் பஜ்ரங் தள பாந்தா மாவட்ட இணைச் செயலாளர் எனத் தன்னை குறிப்பிட்டுள்ளார். இதை பஜ்ரங்தளம் தலைமை மறுத்துள்ளது. பாந்தாவின் கியோட்டரா கிராமத்தில் வசிக்கும் லவ்லேஷின் தந்தை யக்யாதிவாரி, ‘ஒரு பெண்ணை அறைந்ததற்காக எனது மகன் சில வருடங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி இருந்தான். கடைசியாக அவன் ஆறு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தான்’ எனக் கூறியுள்ளார்.

காஸ்னச்சின் பகேலா கிராமவாசியான அருண் மவுரியாவின் பெற்றோர் 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால், தெருக்களில் யாசகம் கேட்டு பிழைத்தவர், சரக்கு ரயிலின் பெட்டியை உடைத்து திருடியபோது 2 காவலரை கொன்ற வழக்கில் அருண் சிறையில் இருந்துள்ளார்.

ஹமீர்பூரின் குராரா கிராமத்தை சேர்ந்தவர் சன்னி சிங். இவர் 12 வருடங்களுக்கு முன் குராராவில் சில குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே, இந்த மூவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் எனக் கருதப்படுகிறது.

இதன் விலை சுமார் ரூ.7 லட்சம்: இச்சூழலில், சம்பவம் நடந்த அன்று, அத்தீக்குக்கு பின்புறம் நின்று அவரது தலையில் முதல் நபராக லவ்லேஷ் சுட்டுள்ளார். இதற்காக அவர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி துருக்கி நாட்டின் 9 எம்எம் ஜிகானா வகையை சேர்ந்தது. இதன் விலை சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜிகானா வகை கைத்துப்பாக்கியில்தான், பஞ்சாபின் பாடகர் மூஸேவாலாவும் சுடப்பட்டிருந்தார்.

இரண்டாவதாக எதிரில் நின்று அஷ்ரப்பை சுட்ட சன்னி சிங் பயன்படுத்தியதும் துருக்கி நாட்டின் 9 எம்எம் கிர்ஸான் வகை கைத்துப்பாக்கி ஆகும். இதன் விலை சுமார் ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. மூன்றாவது அருண் மவுரியா நாட்டுத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இது குறித்து 1996-ல் அத்தீக்கை ஒரு வழக்கில் கைது செய்தவரும் ஓய்வுபெற்ற உ.பி. போலீஸ் ஆய்வாளருமான தீரேந்திரராய் கூறும்போது, ‘‘பெரிய குற்றங்களில் ஈடுபடாத இந்த மூவரிடம் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுத் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. இவை பாகிஸ்தான் வழியாகவே உ.பி.க்கு வந்திருக்கும்.

எனவே, இந்த படுகொலையின் பின்னணியில் ஒரு பெரும் புள்ளி, கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மூவருடன் வந்த இருவர் கொலைக்கு பின் தப்பி விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அத்தீக், அஷ்ரப் சகோதரர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவரும் 2005-ல் ராஜுபால் எம்எல்ஏவை சுடப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பாகிஸ்தானிலிருந்து வந்தவை எனக் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில், அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன் மற்றும் குட்டு முஸ்லிம் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். இவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டால் மேலும், பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு: சிறைத் துறை வட்டாரத்தினர் கூறும்போது, “விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில்அத்தீக் அகமதுக்கு பழக்கமான வர்கள் பலர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 3 பேரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கலாம் எனக் கருதி, அவர்கள் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பிரயாக்ராஜ் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x