Published : 12 Apr 2023 09:36 AM
Last Updated : 12 Apr 2023 09:36 AM

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் 2023 | 52 புதிய முகங்கள்; பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலின் சுவாரஸ்யப் பின்னணி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இவர்களில் 52 பேர் புதிய முகங்களாவர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சி உள்ளது. அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவின் தென்மாநில வியூகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் கருத்துக்கணிப்புகள் சில இப்போதைய சூழலில் தேர்தல் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகக் கூற பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதனால் பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர்களுக்குக் கூட இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை. வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக மிகுந்த மெனக்கிடல் மேற்கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 முன்னாள் முதல்வர்களை எதிர்கொள்கிறது: இந்த முறை சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்எல்ஏக்களில் சிலர் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எடியூரப்பா, ஹல்லாடி ஸ்ரீநிவாச ஷெட்டி ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி பார்த்தால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள லிங்காயத் தலைவர் வி.சோமண்ணா மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா என இரு முன்னாள் முதல்வர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதியிலும் சித்தராமையா வருணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜகவின் ஒக்கலிகா சமூகத் தலைவரும் அமைச்சருமான ஆர்.அசோக், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் களம் இறக்கப்படுகிறார். அசோக் தனது வழக்கமான தொகுதியான பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் சி.பி.யோகேஸ்வர், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமியை எதிர்த்து சன்னபட்டனா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிக்காவோன் தொகுதி, கட்சி தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் விஜயேந்திரா ஷிகாரிபூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகின்றனர்.

சீட் மறுக்கப்பட்டவர்கள்: இந்த முறை தேர்தலில் சில முக்கியப் பிரமுகர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. 6 முறை எம்எல்ஏ.,வாக இருந்த அமைச்சர் அங்காராவுக்கு சீட் வழங்கப்படவில்லை. அதேபோல் மற்றொரு அமைச்சர் பி.எஸ்.ஆனந்துக்கும் சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் சித்தார்த் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ் மடண்டூர் (புத்தூர்) கே.ரகுபதி பட் (உடுப்பி), லாலாஜி ஆர். மெண்டான் (கவுப்), அனில் பெனாகே (பெலகாவி வடக்கு), மகாதேவப்பா யாடவாட் (ராம்துர்க்), ராமப்பா லாமணி (ஷிர்ஹட்டி) மற்றும் குலிஹட்டி சேகர் (ஹொசதுர்கா) ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணராஜா தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இத்தொகுதியில் கடந்தமுறை எஸ்.ஏ.ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதேவேளையில் எதிர்பார்த்தபடியே மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் மகன் நிகில் கட்டி, அவரது சகோதரர் ரமேஷ் கட்டி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் ஆனந்த் சந்திரசேகர் மனாமியின் மனைவிக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சீட்: பெங்களூரு மாநகர முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் சாம்ராஜ்பேட் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் கோரட்டகரே தொகுதியில் போட்டியிடுவார். மாண்டியா எம்.பி. சுமலதாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள சச்சிதானந்த் இத்தேர்தலில் ஸ்ரீரங்கப்பட்டனாவில் போட்டியிடுவார்.

சாதிவாரி பங்களிப்பு: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 32 ஓபிசி வேட்பாளர்கள், 30 எஸ்.சி வேட்பாளர்கள், 16 எஸ்டி வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்கள். 5 பேர் வழக்கறிஞர்கள். 3 பேர் கல்வியாளர்கள். 31 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேட்பாளர்கள் தேர்வு ஜனநாயக முறையில் நடைபெற்றது. இதற்காக 25000 பேர் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தெரிவித்தார். டெல்லியில் கட்சி மேலிடத் தலைவர்கள் நான்கைந்து நாட்கள் இதற்காக ஆலோசனை நடத்தியதாகக் கூறினர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி 166 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், ஐக்கிய ஜனதா தளம் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x