Published : 08 Apr 2023 07:22 PM
Last Updated : 08 Apr 2023 07:22 PM

பிரதமர் மோடியின் இம்மாத ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை உ.பி.யின் 100 மசூதி, தர்க்காக்களில் ஒலிபரப்ப பாஜக திட்டம்

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் மாத ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை உத்தரப் பிரதேசத்தில் 100 மசூதிகளிலும் தர்க்காக்களிலும் ஒலிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமரின் மன் கி பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இதன் 100-வது நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் நோக்கில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதிகள், தர்காக்கள் என இஸ்லாமியர்களுடன் தொடர்புடைய 100 இடங்களில் ஒலிபரப்ப அம்மாநில பாஜக திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தெரிவித்த உத்தரப் பிரதேச பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் குன்வர் பசித் அலி, ''பிரதமரின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம். இஸ்லாமிய சமூகத்தோடு தொடர்புடைய 100 இடங்களில் பிரதமரின் 100-வது மன் கி பாத் உரையை ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளோம். 50-60 மசூதிகள், 30-35 தர்காக்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் சபையான மஜ்லிஸ்கள் ஆகியவற்றில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும்.

அதோடு, கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய 12 மன் கி பாத் நிகழ்ச்சிகளின் உருது மொழிபெயர்ப்பு புத்தகம் வெளியிடப்படும். இதன்மூலம் நமது நாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். இந்தப் புத்தகங்கள் இஸ்லாமிய மத அறிஞர்களுக்கு வழங்கப்படும். இதற்கான விழா வரும் 30-ம் தேதி லக்னோவில் பிரமாண்டமாக நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் தோராயமாக 19 சதவீத இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள 30 நாடாளுமன்றத் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளார்கள். அதோடு, 15-20 நாடாளுமன்றத் தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x