Published : 05 Apr 2023 04:36 PM
Last Updated : 05 Apr 2023 04:36 PM

‘புலனாய்வு அமைப்புகளில் மத்திய அரசு தலையீடு’ - 14 எதிர்க்கட்சிகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பிஆர்எஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் மறுப்பு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் அந்த மனுவை வாபஸ் பெற்றன. முன்னதாக, இது தொடர்பாக நீதிமன்றம் தனது கருத்தைப் பதிவு செய்கையில், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணையின்போது அரசியல்வாதிகளைக் கையாள என்று தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதல்களை வகுக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், கட்சிகளுக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால் வழக்குகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகளின் மனு விசாரணைக்கு ஏற்க மறுக்கப்பட்டது இவ்விவகாரத்தில் அவற்றிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. கர்நாடகா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த அம்மாநிலத்திற்கு புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் இன்று கூட குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.

தலைமை நீதிபதி சரமாரி கேள்வி: உச்ச நீதிமன்ற தலைமை நீத்பதி டி.ஒய்.சந்திரசூட் மனுவை நிராகரிக்கும் முன்னர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். எதிர்க்கட்சிகள் மனுவின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் அதனை விசாரிப்பதற்கான சாத்தியம் குறித்தும் சந்தேகம் எழுப்பினார். அப்போது, எதிர்க்கட்சித் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியிடம், "விசாரணை, தண்டனைகளில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு விலக்கு கேட்கிறீர்களா?. ஒருவேளை அரசியல்வாதிகளுக்கு சாமானியர்களைத் தாண்டி தனிச் சிறப்பான உரிமைகள் ஏதும் இருக்கிறது எனக் கருதுகிறீர்களா?" என்று கேட்டார்.

அப்போது குறுக்கிட்ட சங்வி, "எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு என்று எவ்வித பாதுகாப்பையும் கோரவில்லை. ஆனால் சட்டத்தை நியாயமாக, பாரபட்சமின்றி பயன்படுத்த வேண்டும் என்றுதான் கோருகிறோம். அரசாங்கம் மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது என்பதே எங்களின் வாதம்" என்றார்.

இருந்தாலும் சங்வியின் வாதத்தால் சமரசமடையாத நீதிபதி, "இந்த மனு பிரத்யேகமாக அரசியல்வாதிகளுக்கானதாக இருக்கிறது. மனுதாரர் சொல்லும் ஊழல், கிரிமினல் சதி போன்றவற்றால் சாமான்ய மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டதா என்பதை ஏதும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதை நீதிமன்றம் மூலம் அணுகாமல் நாடாளுமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளலாம்" என்றார்.

எதிர்க்கட்சிகள் மனுவின் விவரம்: ‘பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒடுக்குவதையும், அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதையும் இலக்காக வைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது. எதிர்கட்சி தலைவர்களை பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்க இந்த அமைப்பை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. வழக்குப் போடப்பட்ட தலைவர்கள் பாஜகவுடன் சமரசம் ஆகிவிட்டால் அந்த வழக்குகள் அப்படியே கைவிடப்பட்டு விடுகின்றன. 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்தே போடப்படுகின்றன.

விதிகள் மீறல்: கைது நடவடிக்கைகளின் போது அதற்கான முந்தைய, பிந்தைய விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிப்பதில்லை. அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் நிலைப்பாடு. விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x