Published : 21 Sep 2017 12:26 PM
Last Updated : 21 Sep 2017 12:26 PM

புகைபிடிக்க மறுத்ததற்காக டெல்லியில் சீக்கிய இளைஞர் கொலை

சீக்கியர் என்பதற்காகப் புகைபிடிக்க மறுத்த 21 வயது இளைஞர் ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொல்லப்பட்ட குருபிரீத் சிங்கின் நண்பர் மனீந்தர் சிங் கூறும்போது, ''திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் நானும், குருபிரீத்தும் கல்லூரி புராஜெக்ட் சம்பந்தமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு வந்த ரோஹித் கிருஷ்ணா மகந்தோ என்பவர் எங்களுடன் சண்டையிடத் தொடங்கினார். குடித்திருந்த அவர் எங்களின் முகத்தில் சிகரெட் புகையை ஊதினார்.

இதை எதிர்த்த நாங்கள், சீக்கியர்களாகிய எங்களுக்கு மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதில் விருப்பமில்லை என்று தெரிவித்தோம். ஆனால் எங்களுடன் வாதிட்ட ரோஹித், இதுவே நீங்கள் அசாமில் இருந்தால் நிச்சயம் உங்களைக் கொன்றிருப்பேன் என்றார்.

சில நிமிடங்களில் இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றோம். எங்கள் வண்டியைப் பின் தொடர்ந்து வந்த ரோஹித்தின் கார், வண்டியின் மேல் மோதியது. கார் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டோம். எங்களுக்கு முன்னால் நின்றிருந்த ஆட்டோ, கார் ஆகியவற்றின் மீதும் ரோஹித்தின் கார் மோதியது.

அங்கிருந்தவர்கள் எங்கள் இருவரையும் அருகில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே திங்கட்கிழமை அன்று அனுமதிக்கப்பட்ட குருபிரீத், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பலியானார். எனக்குப் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை'' என்றார்.

இந்நிலையில் காவல் துறை விசாரணையில் ரோஹித் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. திங்கட்கிழமை அன்றே அவரைக் கைது செய்த போலீஸார், ஜாமீனில் அவரை வெளியே விட்டனர்.

தற்போது குருபிரீத்தின் மரணத்துக்குப் பிறகு மீண்டும் ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, சட்டப்பிரிவு 279 (கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுதல்), 337 (அடுத்தவர்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தல்) 302 (கொலைக் குற்றம்), 307 (கொலை செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x